பள்ளிப்பட்டு அருகே 45 ஆண்டுகளுக்கு பிறகு கொள்ளாபுரி லட்சுமியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமான பொதுமக்கள் தரிசனம்

பள்ளிப்பட்டு, ஜன. 23: பள்ளிப்பட்டு அருகே 45 ஆண்டுகளாக தடைப்பட்ட கொள்ளாபுரி லட்சுமியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றதால் கிராமமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கோணசமுத்திரம் கிராமத்தில் ஸ்ரீ கொள்ளாபுரி லட்சுமியம்மன் ஆலய பணிகள் தொடங்கப்பட்டபோது கிராமத்தில் இறப்பு சம்பவங்கள் அதிகரித்ததால் கோயில் பணிகள் நிறுத்தப்பட்டது. சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோயில் பணிகள் தொடங்கியதும், மீண்டும் இறப்பு சம்பவங்கள் தொடர்ந்ததால் கோயில் கட்டி முடிக்காத நிலை ஏற்பட்டது. இச்சம்பவம் கிராம மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி வந்தது. இருப்பினும் படிப்படியாக கோயில் கட்டிடப் பணிகள் முடிந்ததிருந்த நிலையில் 45 ஆண்டுகளுக்கு பிறகு மஹா கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் கிராமமக்கள் சார்பில் செய்யப்பட்டது. இதற்காக கோயில் வளாகத்தில் யாகசாலைகள் அமைத்து மூன்று நாட்கள் ஹோமகுண்ட பூஜைகள் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் மூன்றாம் நாளான நேற்று காலை மஹா பூர்ணாஹுதி பூஜைகள் தொடர்ந்து, கிராமமக்கள் ஏராளமானோர் கோயில் முன்பு கூடியிருக்க மேள தாளங்கள் முழங்க புனிதநீர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதனையடுத்து கோபுர கலசத்திற்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று, பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். ஆலய நிர்வாகம் சார்பில் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல் பிரசாதம், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 45 ஆண்டுகளாக தடைப்பட்ட அம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பான முறையில் நடைபெற்றதால் கிராமமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post பள்ளிப்பட்டு அருகே 45 ஆண்டுகளுக்கு பிறகு கொள்ளாபுரி லட்சுமியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமான பொதுமக்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: