கோயில்களில் வழிபாடு செய்வதற்கு ஒவ்வொரு இந்துக்கும் உரிமை உண்டு: காஞ்சியில் நிர்மலா சீதாராமன் பேட்டி

சென்னை: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் விழாவையொட்டி, காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் சிறப்பு ராமபஜனை மற்றும் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு தரிசனம் செய்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழகத்தில் கோயில்களை தவறாக பயன்படுத்தி, இந்துக்களின் வழிபாட்டு உரிமையில் தலையிடுவது சரியல்ல. பிரதமர் பங்கேற்கும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் விழாவை மக்கள் அனைவரும் பார்க்க விரும்புவார்கள். கோயில்களில் வழிபட ஒவ்வொரு இந்துவுக்கும் உரிமை உண்டு, இந்துக்களின் உரிமையை பறிக்க நினைக்கக்கூடாது’’ என்றார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் கூறுகையில், ‘‘காமாட்சியம்மன் கோயிலில் பஜனை மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்த அனுமதி பெறப்பட்டது. மேலும், கும்பாபிஷேகம் நிகழ்ச்சியை திரைகள் அமைத்து நேரடி ஒளிபரப்பு செய்யமாட்டோம் என்று கடிதம் கொடுத்து இருந்தனர்’’ என்றார்.

* எல்இடி திரையில் நேரடி ஒளிபரப்பு
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் விழாவையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுமக்களுடன் அமர்ந்து, அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை காணுவதற்கு, எல்இடி திரை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை காணுவதற்கு உரிய அனுமதி இல்லை எனக்கூறி நேற்று காலை காவல்துறை மூலம் எல்இடி திரைகள் அகற்றப்பட்டது. இதனையடுத்து, இக்கோயிலில் மீண்டும் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட ஏராளமான பக்தர்கள், எல்இடி திரையில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பார்த்தனர்.

The post கோயில்களில் வழிபாடு செய்வதற்கு ஒவ்வொரு இந்துக்கும் உரிமை உண்டு: காஞ்சியில் நிர்மலா சீதாராமன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: