குடியரசு தினவிழாவையொட்டி சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அமல்

சென்னை: நாட்டின் 75 வது குடியரசு தினவிழாவையொட்டி சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் 24, 25, 26 ஆகிய நாட்களில் 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 75வது குடியரசு தினவிழா வரும் 26ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி ஒன்றிய உள்துறை அமைச்சகம், நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்துள்ளது.

அதன்படி நாடு முழுவதும் உள்ள விமானநிலையங்கள், முக்கிய ரயில் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான பஸ் நிலையங்கள், மார்க்கெட்டுகள் போன்ற இடங்களில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து சென்னை விமானநிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு வரும் 30ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும்.

மேலும் வரும் 24, 25, 26 ஆகிய 3 நாட்கள் உச்சக்கட்ட பாதுகாப்பாக 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை விமானநிலையத்திற்கு வரும் வாகனங்களை, பிரதான நுழைவு கேட் பகுதியிலேயே நிறுத்தி பாதுகாப்பு படையினர் மோப்ப நாய் உதவியுடன் சோதனையிடுகின்றனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் பரிசோதிக்கின்றனர். விமானநிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து வந்து கண்காணிக்கின்றனர்.

அதேபோல் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மோப்ப நாய்களுடன் சென்னை விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனையிட்டு கண்காணித்து வருகின்றனர். பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால், உள்நாட்டு பயணிகள் விமானம் புறப்படுவதற்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சர்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவும் வரவேண்டும் என சென்னை விமானநிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சென்னை விமானநிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

The post குடியரசு தினவிழாவையொட்டி சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அமல் appeared first on Dinakaran.

Related Stories: