சிவில் நீதிபதி பதவிக்கு வரும் 29ம் தேதி முதல் நேர்முக தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: சிவில் நீதிபதி பதவிக்கு வரும் 29ம் தேதி முதல் நேர்முக தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு மாநில நீதித்துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவியில் காலியாக உள்ள 245 பணியிடங்களை நிரப்புவதற்கான முதன்மை எழுத்து தேர்வை (மெயின் தேர்வு) கடந்தாண்டு நவம்பர் 4, 5ம் தேதி நடத்தியது. இத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அத்தேர்வுக்கான அறிவிப்பில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்முக தேர்வுக்கு தற்காலிகமாக 472 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதற்கான முடிவுகள் கடந்த 5ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில் உரிமையியல் நீதிபதி பதவிக்கான நேர்முக தேர்வு வருகிற 29ம் தேதி முதல் பிப்ரவரி 10ம் தேதி வரை (பிப்ரவரி 3ம் தேதி, 4ம் தேதி, சனி, ஞாயிறு நீங்கலாக) ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் இணையவழி விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளவாறு அனைத்து மூலச்சான்றிதழ்களையும் நேரில் கொண்டு வர வேண்டும். நேர்முக தேர்விற்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்பு குறிப்பாணையினை விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளத்தில் இருந்து (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவும் விவரங்கள் தெரிவிக்கப்படும். நேர்முக தேர்விற்கு அழைப்பாணை தனியே அனுப்பப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்விற்கு உரிய நாளில், நேரத்தில் கலந்து கொள்ள தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படாது என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.

The post சிவில் நீதிபதி பதவிக்கு வரும் 29ம் தேதி முதல் நேர்முக தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: