தார் உருக்கு ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் அவதி: வேறு இடத்துக்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கரைமேடு ஊராட்சி பகுதியில், சென்னை – கும்பகோணம் சாலையருகே தார் உருக்கு ஆலைகள் இயங்கி வருகிறது. இதனருகே 20 கிராமங்களுக்கு பாசன வசதி தரும் நன்நீர் ஏரியான வாலாஜா ஏரி மற்றும் பாசன வாய்க்காலும் செல்கிறது. இந்த ஏரியின் மூலம் 20 கிராம விவசாயிகளும் பாசன வசதி பெற்று விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் மட்டும் கரைமேடு, அம்பாள்புரம், பின்னலூர், தலைக்குளம், பிரசன்னராமாபுரம் உள்ளிட்ட கிராமங்களின் விவசாய விளைநிலங்களின் பரப்பளவு சுமார் 300 ஏக்கருக்கு மேல் உள்ளதாகவும், வாலாஜா ஏரியிலிருந்து பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீர் கிளை வாய்க்கால்கள் மூலம் பாசன வசதி பெற்று விவசாயம் செய்து வருவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

இந்த தார் உருக்கு ஆலை அருகே கரைமேடு கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட குடியிருப்புவாசிகளும் வசித்து வருகின்றனர். இதனை தவிர ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் இயங்கி வருகிறது. அதில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த தார் உருக்கு ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு புகை இரவு, பகல் நேரங்களில் காற்று மூலம் குடியிருப்பு பகுதிக்கு செல்வதால் அங்கிருக்கும் குடியிருப்புவாசிகளுக்கு சுவாச கோளாறு ஏற்பட்டு, உடல் ரீதியாக பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். மேலும் விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள நெற்பயிரில் மாசு படிந்து விளைச்சல் திறனும் பாதிப்படைவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இங்குள்ள பிரதான சாலையின் வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால், அதில் பயணிப்பவர்களும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக அப்பகுதி வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், எங்களுக்கு முக்கிய நீராதாரமாக உள்ள வாலாஜா ஏரி மற்றும் நீர்நிலைகள், பாசன வாய்க்கால்கள், குடியிருப்புகள், விளைநிலங்கள் அனைத்தும் பாதிக்கப்படாமல் இருக்க இந்த தார் உருக்கு ஆலைகளை வேறு இடத்துக்கு மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

The post தார் உருக்கு ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் அவதி: வேறு இடத்துக்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: