நாளை அண்ணாமலையார் தீர்த்தவாரி மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில்

திருவண்ணாமலை, ஜன.18: மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் நாளை தீர்த்தவாரி நடக்கிறது. அதில், அண்ணாமலையார் அலங்கார ரூபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருவண்ணாமலையில் அருள் தரும் அண்ணாமலையாருக்கு தென்பெண்ணை ஆறு, வடபெண்ணை எனப்படும் செய்யாறு மற்றும் கவுதம நதி ஆகியவற்றில் நடைபெறும் தீர்த்தவாரி தனிச்சிறப்பு மிக்கது. தீர்த்தவாரியின் நிகழ்வின்போது, சந்திரசேகரர் திருவடிவாக அண்ணாமலையார் தீர்த்தவாரியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிகிறார். அதன்படி, தை மாதம் 5ம் நாளன்று மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றிலும், ரதசப்தமி நாளில் கலசபாக்கம் செய்யாற்றிலும், மாசி மகத்தன்று பள்ளிகொண்டாப்பட்டு கவுதம நதியிலும் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, தை 5ம் நாளான நாளை (18ம்தேதி) கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி விமரிசையாக நடக்கிறது. அதையொட்டி, நாளை காலை திருவண்ணாமலை கோயிலில் இருந்து அலங்கார ரூபத்தில் அண்ணாமலையார் வடிவான சந்திரசேகரர் எழுந்தருளி, தென்பெண்ணைக்கு புறப்பாடு நடைபெறும். அப்போது, திருவண்ணாமலையில் இருந்து மணலூர்பேட்டை செல்லும் சாலையின் வழிநெடுகிலும் உள்ள கிராமங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து சுவாமிக்கு மண்டகபடி செலுத்த உள்ளனர். அதைத்தொடர்ந்து, தென்பெண்ணையாற்றில் சந்திரசேகரர் எழுந்தருள்கிறார். அப்போது, மணலூர்பேட்டை விநாயகர், மாரியம்மன், செல்லியம்மன், முத்துமாரியம்மன், சிவகாம சுந்தரி சமேத அகத்தீஸ்வரரும் சந்திரசேகரருடன் எழுந்தருள்வர். அதைத்தொடர்ந்து, மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் இருந்து நாளை மறுதினம் சந்திரசேகரர் புறப்பட்டு திருவண்ணாமலை திருக்கோயில் வந்தடைவார். அதையொட்டி, மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

The post நாளை அண்ணாமலையார் தீர்த்தவாரி மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் appeared first on Dinakaran.

Related Stories: