18 காளைகளை அடக்கி கருப்பாயூரணி கார்த்தி முதலிடம்; முதல் பரிசு பெற்ற கட்டப்பா காளை; விறுவிறுப்பாக நடைபெற்று வந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு


மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. ஜல்லிக்கட்டு போட்டியில் 652 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன; 194 காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபட்டன. மதுரை அருகே, அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகள் இதையடுத்து ஆண்டுதோறும் நடக்கும் சம்பிரதாய முறைப்படி முதலாவதாக முனியாண்டி சுவாமி கோயில் காளை உள்ளிட்ட 3 கோயில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.

இந்த காளைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் தங்கக்காசு வழங்கப்பட்டது. இதையடுத்து வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் பரபரப்பான இறுதிச்சுற்றில் கார்த்தி – அபிசித்தர் ஆகிய இருவரும் போட்டி போட்டு காளைகளை அடக்கினர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கி கருப்பாயூரணி கார்த்தி முதலிடம் பிடித்தார். 2022-ல் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்றவர் கருப்பாயூரணி கார்த்திக். முதல் பரிசு வென்ற கருப்பாயூரணி கார்த்திக்குக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.

17 காளைகளை அடக்கி 2-ம் இடம் பிடித்த மாடுபிடி வீரர் அபிசித்தருக்கு பைக் பரிசாக அறிவிக்கப்பட்டது. 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடித்தவர் அபிசித்தர். சிறந்த காளையாக மேலூர் குணா என்பரின் மாடு தேர்வு செய்யப்பட்டது. மாட்டின் உரிமையாளருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த காளையாக 2ம் பரிசுக்கு மதுரை காமராஜபுரம் வெள்ளைக்காளி சௌந்தர் என்பவரின் மாடு தேர்வு செய்யப்பட்டது.

The post 18 காளைகளை அடக்கி கருப்பாயூரணி கார்த்தி முதலிடம்; முதல் பரிசு பெற்ற கட்டப்பா காளை; விறுவிறுப்பாக நடைபெற்று வந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: