சென்னையில் போகி பண்டிகை கோலாகல கொண்டாட்டம் அரும்பாக்கம், பெருங்குடியில் காற்று மாசு அதிகரிப்பு: புகையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

சென்னை: சென்னையில் போகி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொது மக்கள் அதிக அளவில் பழைய பொருட்களை எரித்ததால் அரும்பாக்கம் மற்றும் பெருங்குடியில் காற்றின் தரக்குறியீடு மோசமடைந்து. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படும். அந்த வகையில் பொங்கல் பண்டிகையின் முதல் நாள் போகி கொண்டாடுவது வழக்கம். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று போகி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகாலையில் எழுந்து வீட்டின் முன்பாக தீயை எரியவிட்டு அதில் பழைய பொருட்களை எரித்து பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப கசப்பான நினைவுகள், கவலைகளை மறந்து வரும் நாட்கள் இனிய நாட்ளாக அமைய வேண்டும் என்று பொங்கல் பண்டிகையை வரவேற்றனர். அதுமட்டுமின்றி சிறுவர்கள் தீயின் முன்பாக போகி மேளம் அடித்து உற்சாகமாக கொண்டாடினர்.

சென்னை மயிலாப்பூர், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர், கிண்டி, அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் போகி கொண்டாடி, பழைய பொருட்களை எரித்து மகிழ்ச்சியாக போகி கொண்டாடினர். இந்த போகி பண்டிகை கிராமங்களிலட பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுத்தாத நிலையில் நகரங்களில் வாழும் மக்களும் பழைய பொருட்களை எரிக்கும் போது புகை மூலமாக சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. சென்னையில் நேற்று காலை முதல் பழைய பொருட்களை எரித்து மக்கள் போகி கொண்டாடியதால் புகைமூட்டம் அதிகரித்தது. அதிகாலை வேளையில் சராசரி அளவை விட புகைமூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

அதுமட்டுமின்றி புகைமூட்டம் அதிகரித்ததால் சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. நகர் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்ததால் சென்னை நகர் முழுவதும் காற்றின் தரக்குறியீடு சராசரியாக 260 என்ற அளவில் இருந்தது. அரும்பாக்கத்தில் 407, பெருங்குடியில் 493 என்ற அளவை கடந்து கடந்தாண்டை காட்டிலும் மோசமான அளவில் இருந்தது. அத்துடன் வேளச்சேரி, எண்ணூர், அரும்பாக்கம், கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் காற்றின் தரக்குறியீடு அதிகரித்தது. காலை 8 மணிக்கு பின்னர் புகைமூட்டம் மெல்ல மெல்ல விலகத் தொடங்கியது.

 

The post சென்னையில் போகி பண்டிகை கோலாகல கொண்டாட்டம் அரும்பாக்கம், பெருங்குடியில் காற்று மாசு அதிகரிப்பு: புகையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Related Stories: