நாகர்கோவிலில் கேலோ இந்தியா விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

நாகர்கோவில்: நாகர்கோவிலில் கேலோ இந்தியா விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட 350 பேர் பங்கேற்றனர். ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த 2018ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றன. இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில் 2023ம் ஆண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்று, தமிழ்நாட்டில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை நடத்த ஒன்றிய அரசு அனுமதி அளித்தது.

வரும் ஜனவரி 19ம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதி வரை தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை ஆகிய நகரங்களில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடக்க உள்ளன. இந்த போட்டிகளை தொடங்கி வைக்க வருமாறு, பிரதமர் மோடியை, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார். இதன் ஒரு கட்டமாக தற்போது கோலோ இந்தியா விளையாட்டு போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் விழிப்புணர்வு தொடர்பான போட்டிகள் நடந்து வருகின்றன. அதன்படி குமரி மாவட்டத்தில் கேலோ இந்தியா விளையாட்டு தொடர்பான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்ட போட்டி நேற்று நடந்தது. நாகர்கோவிலில் மொத்தம் 5 கி.மீ. தூரம் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பிருந்து இந்த போட்டியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் தர், மாநகராட்சி மேயர் மகேஷ், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. , நாகர்கோவில் ஏ.எஸ்.பி. யாங்சென் டோமா பூட்டியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அமைச்சர் மனோ தங்கராஜூம் போட்டிகளை தொடங்கி வைத்து, அவரும் மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டார். அண்ணா ஸ்டேடியத்தில் தொடங்கி மணிமேடை, வேப்பமூடு, கோட்டார் ஆயுர்வேத கல்லூரி சந்திப்பு, அவ்வை சண்முகம் சாலை, ஒழுகினசேரி சந்திப்பு, வடசேரி அண்ணா சிலை சந்திப்பு வழியாக மீண்டும் ஸ்டேடியத்தில் முடிவடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

The post நாகர்கோவிலில் கேலோ இந்தியா விழிப்புணர்வு மாரத்தான் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: