அலங்கார பூ தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

வாலாஜாபாத், ஜன.13: வாலாஜாபாத்தில் இருந்து தாம்பரம் செல்லும் சாலையை ஒட்டியுள்ள தத்தாநல்லூர் கிராமத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில், ஒரு தொழிற்சாலையில் செயற்கை ரசாயன முறை பூக்கள், பூச்செண்டு மற்றும் உள் அலங்கார பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில், சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் என 150க்கும் மேற்பட்டோர் பகல் நேரங்களில் மட்டுமே வேலைபார்த்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் வேலை முடிந்து, தொழிற்சாலையை பூட்டிவிட்டு அனைத்து தொழிலாளர்களும் வீடு திரும்பியுள்ளனர். இதைத்தொடர்ந்து, நள்ளிரவு பூட்டியிருந்த செயற்கை பூ தொழிற்சாலையில் திடீரென கரும்புகையுடன் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிய துவங்கியது.

இதைகண்டதும் கிராம மக்கள், காஞ்சிபுரம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். எனினும், தொழிற்சாலை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் ஒரகடம், பெரும்புதூர் மற்றும் பெருந்தொழிற்சாலைகளில் இருந்து 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சுமார் 3 மணி நேரத்துக்குமேல் போராடி நேற்று காலை 6 மணியளவில் தொழிற்சாலையில் பரவியிருந்த தீயை முற்றிலும் அணைத்தனர். இவ்விபத்தில், தொழிற்சாலைக்குள் உற்பத்தி செய்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள், மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் என மொத்தம் பலகோடி மதிப்புள்ள பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமாகிவிட்டன. இதுகுறித்து, வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

The post அலங்கார பூ தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: