வெள்ள நிவாரணம், முதலீட்டாளர்கள் மாநாடு, காமராஜருடன் ஒப்பீடு மோடி, அண்ணாமலை மீது அதிமுக கடும் தாக்கு

கிருஷ்ணகிரி: வெள்ள நிவாரணம், முதலீட்டாளர்கள் மாநாடு, காமராஜருடன் ஒப்பீடு உள்ளிட்ட விவகாரங்களில் மோடி, அண்ணாமலையை அதிமுக கடுமையாக தாக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஒன்றியம் குப்பச்சிப்பாறை ஊராட்சி லக்கபத்தனப்பள்ளி கிராமத்தில், மார்கண்டேயன் நதியில் இருந்து, படேதளாவ் ஏரிக்கு செல்லும் பாசன கால்வாய் ரூ.57 லட்சம் மதிப்பில் புனரமைக்கும் பணியினை, அதிமுக துணை பொதுச்செயலாளரும், வேப்பனஹள்ளி எம்எல்ஏவுமான கே.பி.முனுசாமி நேற்று துவக்கி வைத்தார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த பாதயாத்திரையின் போது, அண்ணாமலை, பிரதமர் மோடியை, காமராஜருடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். தற்கால தலைவர்களில் யாரையும், காமராஜருடன் ஒப்பிட்டு பேச முடியாது. காமராஜர் மிகப்பெரிய கர்மவீரர். சுதந்திர போராட்ட தியாகி. அவருடன் யாரையும் ஒப்பீடு செய்யக்கூடாது. அண்ணாமலை முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து பேசியுள்ளார். ஒரே நாடு, ஒரே தேசம் என சொல்லும் பாஜ தலைவர்கள், எல்லா மாநிலத்திலும் முதலமைச்சர்கள் நடத்தும் மாநாட்டில் பிரதமர் கலந்துகொண்டு, தொழில் முனைவோர்களை அழைத்து, இங்கு தொழில் தொடங்குங்கள், பாதுகாப்பான மாநிலம் என்று சொல்லியிருந்தால், உண்மையில் அண்ணாமலை பேசியதை வரவேற்பேன். மாறாக பிரதமர், குஜராத் சென்று, தொழில் முதலீட்டாளர்களை அழைத்து பேசி அனுப்புகிறார். ஒரு நாட்டின் பிரதமர் ஒரு சிறிய வட்டத்திற்குள் அமர்ந்து விடுகிறார். இதைப்பற்றி பேச அண்ணாமலைக்கு தார்மீக உரிமை இல்லை.

திராவிட கட்சிகளால் தான் ஊழல் இருப்பதாக அண்ணாமலை பேசுகிறார். திராவிட இயக்கங்களின் 50 ஆண்டு கால ஆட்சியில், குறிப்பாக அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகம் அனைத்து துறைகளிலும், முதன்மை மாநிலமாக விளங்கியுள்ளது. மத்திய பாஜ அரசு, சிறந்த மாநிலம் என தமிழகத்திற்கு பல்வேறு சான்றிதழ்களை வழங்கியுள்ளது. அதை மறைத்து, தான்தோன்றித்தனமாக அண்ணாமலை பேசுவது, அரசியல்வாதிகளை விமர்சனம் செய்வது, நாகரீகமான அரசியல் இல்லை. அவர் காவல் துறையில் பணிபுரிந்தவர். காவல் துறையில் பணிபுரிபவர்கள், எல்லோரையும் குற்றவாளிகளாகவே பார்ப்பார்கள். அதுபோல் அண்ணாமலை பார்க்கிறார். தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு, பிரதமர் ஏற்கனவே நிதி ஒதுக்கி விட்டதாக தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசு மற்றும் பிரதமர், பாஜ ஆட்சி இல்லாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்காமல் வஞ்சிக்கிறது. இவ்வாறு கே.பி. முனுசாமி கூறினார்.

* தொண்டர்கள் இல்லா தலைவர் எப்படி தொண்டர்களை மீட்பார்: ஓபிஎஸ்சை கலாய்த்த முனுசாமி
கே.பி.முனுசாமி கூறுகையில், ‘நாடாளுமன்ற தேர்தலின் போது, அதிமுகவுடன் எந்த கட்சி கூட்டணி என்பதை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்து அறிவிப்பார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் கருணையால் அமைச்சர், முதலமைச்சர் போன்ற பதவிகளை பெற்றார். இந்த இயக்கத்தின் நலனில் அக்கறை காட்டாமல், சுயநலத்திற்காக செயல்பட்டதால், அவர்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின், அவர் எதிரிகளுடன் சேர்ந்து இயக்கத்தை வலுவிழக்க செய்ய முயற்சி செய்து வருகிறார். நீதிமன்றம் பல முறை அவரது தலையில் குட்டியும், தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். தொண்டர்கள் இல்லாத இயக்கத்தின் தலைவர், தொண்டர்களை மீட்போம் என, அவர் மாவட்டம் மாவட்டமாக செல்வது வேடிக்கையாக உள்ளது’ என்றார்.

The post வெள்ள நிவாரணம், முதலீட்டாளர்கள் மாநாடு, காமராஜருடன் ஒப்பீடு மோடி, அண்ணாமலை மீது அதிமுக கடும் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: