கால்வலி போன்ற சிரமங்கள் இருப்பதால் ராமர் கோயில் விழாவுக்கு வாய்ப்பிருந்தால் செல்வேன்: எடப்பாடி பழனிசாமி பேட்டி

சேலம்: ‘கால்வலி போன்ற சிரமங்கள் இருப்பதால் அயோத்தியில் நடக்கும் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு வாய்ப்பிருந்தால் செல்வேன்’ என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்தார். சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுக உரிமை விவகாரத்தில் பன்னீர்செல்வத்தின் மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. தற்போது அதிமுக எல்லாவகையிலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆக்கப்பூர்வமான பணிகளை செயல்படுத்தி வருகிறது. 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ரகசியமாக தேர்வு செய்துவிட்டோம் என்று பரவி வரும் தகவல்கள் பொய்யானது.

அதிமுகவை பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவித்தவுடன் தலைமைக் கழகத்தில் முறைப்படி விருப்பமனுக்கள் பெறப்படும். பின்னர் அவை முறையாக ஆய்வு செய்யப்படும். அதில் வெற்றி வாய்ப்பு யாருக்கு உள்ளதோ, அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படும். அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்தபிறகு யார்- யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவு செய்யப்படும். சேலம் பெரியார் பல்கலைக்கழக விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளதால் அது குறித்து கருத்து சொல்வது சரியாக இருக்காது. அயோத்தி ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம். அது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. வாய்ப்பிருந்தால் நானும் கலந்து கொள்வேன். எனக்கு கால்வலி போன்ற சிரமங்கள் இருக்கிறது. அதை பொறுத்துதான் கும்பாபிஷேக நாளில் அங்கு செல்லமுடியுமா என்பதை முடிவு செய்வேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

The post கால்வலி போன்ற சிரமங்கள் இருப்பதால் ராமர் கோயில் விழாவுக்கு வாய்ப்பிருந்தால் செல்வேன்: எடப்பாடி பழனிசாமி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: