மயூர வாகன சேவன விழாவின் 100வது ஆண்டு விழா பாம்பன் சுவாமிகளின் சரித்திரம் எனும் மறுபதிப்பு செய்யப்பட்ட நூலை வெளியிட்டார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (11.01.2024) சென்னை, திருவான்மியூர், அருள்மிகு பாம்பன் குமரகுருதாசர் சுவாமி திருக்கோயிலில் மயூர வாகன சேவன விழாவின் 100வது ஆண்டை முன்னிட்டு புதுபொலிவோடு மறுபதிப்பு செய்யப்பட்ட “பாம்பன் சுவாமிகளின் சரித்திரம்” என்னும் நூலை வெளியிட்டு, தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் மற்றும் அரசு இசைக் கல்லூரியை சேர்ந்த 108 மாணவ, மாணவியரின் சண்முக கவசம் மற்றும் குமாரஸ்தவம் பாராயணம் மற்றும் மயூர வாகன சேவன காட்சிகளை விளக்கும் நாட்டிய நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார்.

பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, முருகப்பெருமான், ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் தூய பக்தியையும், அவர் இயற்றிய சண்முகக் கவசத்தின் மகிமையையும் தம் மெய்யடியார்கள் அறியும் வண்ணம் திருவிளையாடல் புரிந்த நிகழ்வு மயூர வாகன சேவன விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இச்சிறப்புமிக்க மயூர வாகன சேவன விழாவின் 100வது ஆண்டு விழா மூன்று நாட்கள் திருவான்மியூர், அருள்மிகு பாம்பன் குமரகுருபர சுவாமி திருக்கோயிலில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

அதனையொட்டி “பாம்பன் சுவாமிகளின் சரித்திரம்” என்னும் நூலினை மறுபதிப்பு செய்து புதுப்பொலிவோடு வெளியிட்டிருக்கிறோம். மேலும், தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் மற்றும் அரசு இசைக் கல்லூரியை சேர்ந்த 108 மாணவ, மாணவியர் சண்முக கவசத்தினை பாராயணம் செய்தும், அதன் காட்சிகளுக்கேற்ப நாட்டிய நடனமும் ஆடினர். அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் நாள் முழுவதும் அன்னதானத்தை தொடங்கி வைத்துள்ளோம். இன்று இரவு மயூர வாகன சேவனத்தின் தேர் உலா நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான ஆட்சி ஏற்பட்டபின், கமலமுனி சித்தர், சுந்தரானந்தர் சித்தர், பாம்பாட்டி சித்தர் போன்ற சித்தர்களுக்கு விழா எடுத்து கொண்டாடப்பட்டுள்ளது. அருளாளர்களான சேக்கிழாருக்கான விழாவினை மூன்று நாட்கள் நடத்தியும், திருஅருட்பிரகாச வள்ளலாருக்கு முப்பெரும் விழாவினை நடத்திட ரூ.3.25 கோடி அரசு மானியம் வழங்கி சிறப்பாக நடத்தி, 52 வாரங்கள் தொடர் அன்னதானம் வழங்கியும், சமயக்குறவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர், ஸ்ரீமத் நாதமுனிகள், அவரது பேரன் ஆளவந்தார் ஆச்சாரியார் போன்றவர்களுக்கு விழா எடுத்தும் சிறப்பு செய்யப்பட்டு வருகிறது. மேலும், ரூ.13 கோடி மதிப்பீட்டில் மயிலாப்பூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருக்கோயிலை புனரமைப்பு செய்யும் பணிகளும், ரூ.17 கோடி மதிப்பீட்டில் நாகப்பட்டினம் மாவட்டம், துளசியாப்பட்டினத்தில் ஔவையாருக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு, 1,224 திருக்கோயில்களுக்கு குடமுழுக்குகள் நடந்தப்பட்டுள்ளது. திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ.5,557 கோடி மதிப்பிலான 6,058 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
சித்தர்கள் சான்றோர்கள் ஆன்றோர் பெருமக்களுக்கு விழா எடுத்து சிறப்பு சேர்க்கின்ற ஒரு ஆன்மீக ஆட்சியாக தமிழக முதல்வர் தலைமையில் அமைந்திருக்கின்ற ஆட்சி திகழ்கிறது. இன்றைக்கு பாம்பன் சுவாமிகளின் மயூர வாகன சேவன விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவினை இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பெருவிழாவாக கொண்டாடுவதை பாம்பன் சுவாமிகளின் மீது பற்று கொண்டுள்ள அனைத்து பக்தர்களும் தங்களது மகிழ்ச்சியையும், முதலமைச்சருக்கு நன்றியையும் தெரிவித்தது எங்களுக்கு இது போன்ற நிகழ்ச்சிகளை தொடர்வதற்கு ஊக்கமும் உற்சாகத்தையும் அளிக்கின்றது.

சபரிமலை ஐயப்பன் திருக்கோயிலுக்கு வரலாறு காண அளவிற்கு பக்தர்கள் வருவதால் நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில் தமிழ்நாட்டிலிருந்து வரும் பக்தர்களுக்கு உரிய ஏற்பாடுகள் விரைவான தரிசனத்திற்குரிய ஏற்பாடுகள் குறித்து நமது தலைமைச் செயலர் அவர்கள் கேரள அரசு தலைமைச் செயலர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் இதுகுறித்து வலியுறுத்தியிருக்கின்றார். துறையின் அமைச்சர் என்ற முறையில் கேரள தேவசம் போர்டு அமைச்சர் மற்றும் தலைவரிடமும் பேசியுள்ளோம். சபரிமலையில் பக்தர்கள் நலனை கருதி கேரளா அரசாங்கம் எடுத்து வருகின்ற நடவடிக்கைகள் துரிதமாகத்தான் இருக்கிறது. வருங்காலங்களில் இதுபோன்ற கூட்ட நெரிசல்களை கட்டுப்படுத்துவதற்கும் கேரள அரசு பல்வேறு திட்டங்களையும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. அவற்றிற்கு தமிழ்நாடு அரசும் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் அ.சங்கர், ந.திருமகள், பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞானபாலய தேசிகர் சுவாமிகள், இணை ஆணையர் கி.ரேணுகாதேவி, துணை ஆணையர் சி.நித்யா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மயூர வாகன சேவன விழாவின் 100வது ஆண்டு விழா பாம்பன் சுவாமிகளின் சரித்திரம் எனும் மறுபதிப்பு செய்யப்பட்ட நூலை வெளியிட்டார் அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Related Stories: