திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு 2.50 லட்சம் மரக்கன்று வழங்கப்படும்-அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

திண்டுக்கல் : திண்டுக்கல் வனத்துறை அலுவலகத்தில் பசுமை போர்வை  திட்டம் கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி  நடந்தது. கலெக்டர் விசாகன் தலைமை வகித்தார்.கூட்டுறவுத்துறை அமைச்சர்  ஐ.பெரியசாமி, உணவு- உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி  விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.பின்னர் அமைச்சர்  ஐ.பெரியசாமி பேசுகையில், ‘தேசிய வனக்கொள்கையின்படி தமிழகத்தின் பசுமை  பரப்பு, வனப்பரப்பினை பெருக்குவதற்காக வனத்துறையும், வேளாண்மை- உழவர்  நலத்துறையும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. மாநிலம் முழுவதும்  185 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.  திண்டுக்கல் மாவட்டத்திற்கு 2021-2022ம் நிதி ஆண்டிற்கு இலக்காக 2  லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் ஒதுக்கப்பட்டு வனத்துறை மூலம் நாற்றுகள்  உற்பத்தி செய்து வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் வரப்பு நடவு முறையாக  ஏக்கருக்கு ஒரு விவசாயிக்கு 50 மரக்கன்றுகளும், விளை நிலங்களில் நடவு  செய்ய ஏக்கருக்கு 160 மரக்கன்றுகளும் இலவசமாக வழங்கப்படும். இதன்மூலம்  விவசாயிகள் வருமானம் ஈட்டுவதற்கு வழிவகை செய்யப்படுகிறது. மேலும்  மரக்கன்றுகளை வளர்ப்பதற்கு விவசாயிகளை ஊக்கப்படுத்த 4 ஆண்டுகளுக்கு  நிதியுதவி வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் நாற்றுகள் பெறுவதற்கு  விவசாயிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு  நேரில் சென்றோ அல்லது உழவன் செயலி மூலமாக தங்கள் பெயரை பதிவு செய்தோ  பயனடையலாம். சிறு, குறு, பெண், ஆதி திராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு  இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டம் மூலம் எதிர்காலத்தில்  தமிழகத்தை இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக, மாசற்ற மாநிலமாக, நச்சு  காற்று இல்லாத மாநிலமாக மாற்றவும், விவசாயிகள் வளமோடு இருப்பதற்கும்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றார்.இதில் எம்பி வேலுச்சாமி,  எம்எல்ஏ காந்திராஜ், டிஆர்ஓ லதா, மாவட்ட வன அலுவலர் பிரபு, வேளாண்மை இணை  இயக்குநர் பாண்டித்துரரை, துணை இயக்குநர்கள் அமலா, ரவிபாரதி, வன விரிவாக்க  அலுவலர் இளங்கோவன், திமுக ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட துணை  செயலாளர் தண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு 2.50 லட்சம் மரக்கன்று வழங்கப்படும்-அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: