ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து 11 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றம்: வருவாய்த்துறையினர் தொடர் கண்காணிப்பு

ஸ்ரீவைகுண்டம்: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த டிச.17 மற்றும் 18ம் தேதியில் பெய்த அதிகனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து அதிகபட்சமாக விநாடிக்கு 1 லட்சம் கன அடி தண்ணீருக்கு மேல் வெளியேறியது. குளங்களிலும் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகள், விளைநிலங்கள், வியாபார ஸ்தலங்களிலும் வெள்ளம் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. சில நாட்களாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்திருந்த நிலையில், கடந்த 2 தினங்களாக மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் மழை எச்சரிக்கை காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் கரைபுரள்வதால் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வினாடிக்கு 11 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது. கடந்த முறை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது கரையோரங்களில் உடைப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்த நிலையில், தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வை. அணையில் மணல் வாரி மதகுகளை நீர்வளத் துறையினர் திறந்துள்ளனர். மேலும் மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி உத்தரவுப்படி வை. தாசில்தார் சிவகுமார், ஏரல் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் ஆகியோரது தலைமையில் வருவாய்த் துறையினர் கரையோர பகுதிகளில் வெள்ள அபாயம் குறித்து தொடர்ந்து கண்காணித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆறுமுகநேரி: முக்காணி தாமிரபரணி ஆற்றங்கரைகளில் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் ஆற்றில் இறங்கக் கூடாது என்ற எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் நேற்று அதிகாலை முதல் ஐயப்ப பக்தர்கள், முருக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் ஆற்றின் இரு பக்க கரைகளிலும் மற்றும் படித்துறைகளிலும் இறங்கி குளித்தனர். இதையடுத்து ஆத்தூர் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் உத்தரவுப்படி போலீசார் விரைந்து வந்து ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த மக்களை வெளியேற்றினர். தொடர்ந்து மக்கள், ஆற்றில் இறங்காதவாறு பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

The post ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து 11 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றம்: வருவாய்த்துறையினர் தொடர் கண்காணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: