பூந்தமல்லி பார்வை குறைபாடுடையோர் அரசு பள்ளியில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்: தொடர் நடவடிக்கைக்கு மூன்று குழுக்கள் அமைப்பு

பூந்தமல்லி, ஜன. 9: பூந்தமல்லி பார்வை குறைபாடுடையோர் அரசு பள்ளியில், ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம்’ துவக்க விழா நேற்று நடைப்பெற்றது. இதனை, அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தூய்மையான மற்றும் சுகாதாரமான பள்ளி வளாகங்களை கட்டமைக்க ‘‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முதல் நாளை வரை என 3 நாட்கள் மாநிலம் முழுவதும் நடைபெறும். “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’’ என்ற திட்டத்தினை பூந்தமல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் குமரகுருபரன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், எம்எல்ஏக்கள் ஆவடி நாசர், பூந்தமல்லி கிருஷ்ணசாமி, பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குநர் கண்ணப்பன், பூந்தமல்லி நகர் மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், ‘‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, மாணவர்களின் நலன் காக்க பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இயற்கை சீற்றங்களான புயல், மழையின் காரணமாக பள்ளி வளாகங்கள் சேதமடைந்தது.

அதனை சீர்செய்யும் வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தன் சுத்தம், பள்ளி வளாக தூய்மை, நெகிழி பயன்பாட்டை குறைத்து இயற்கைக்கு உகந்த மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவது குறித்த ஊக்கமூட்டும் நடவடிக்கைகள், பள்ளி காய்கறித்தோட்டம் அமைத்தல் ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’’ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் சிறப்பு செயல்படாக இம்மாதம் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை 3 நாட்கள் சிறப்பு பள்ளி தூய்மை பணி செயல்பாடுகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று நாட்கள் நடைபெறும் விழிப்புணர்வு பணிகள் மூலம் ஆண்டு முழுவதும் பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

அதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான ஒரு குழுவும், மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் ஒரு குழுவும், பள்ளி தலைமையாசிரியர், பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் சங்கம் அடங்கிய குழு என மொத்தம் 3 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்தக்குழுக்கள் அனைத்து வகுப்பறைகளையும் தூய்மை செய்து கரும்பலகை பயன்படுத்தும் வண்ணம் இருப்பதை உறுதி செய்தல், ஆசிரியர் அறைகள், ஆய்வகம் மற்றும் வகுப்பறைகள் உட்பட்ட இதர அறைகளில் தேக்கமடைந்துள்ள தேவையற்ற பொருட்கள் மற்றும் காகிதங்களை கழிவகற்றம் செய்தல், பள்ளி அலுவலகம் மற்றும் தலைமையாசிரியர் அறையை முழுமையாக தூய்மை செய்தல், புதர்கள் மற்றும் களைச்செடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தல், பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகள் மற்றும் பிற அறைகளில் உள்ள தளவாட பொருட்கள், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்தல், காலை மற்றும் மதிய உணவு திட்டத்திற்கான சமையல் அறை நன்கு சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுவதுடன், சமையல் பாத்திரங்கள் முறையாக கழுவப்பட்டு பயன்படுத்துதல், மற்றும் மாணவர்கள் உணவருந்தும் இடம் தூய்மையாகப் பராமரிக்கப்படுதல், பள்ளி வளாகத்தில் நீர் தேங்காவண்ணம் சுற்றுப்புறம் மேடு பள்ளம் இன்றி சமப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், மேலும் அனைத்து வகுப்பறைகளும் சுத்தம் செய்து, நன்றாக நீரால் தூய்மை செய்தல், பள்ளி வளாகத்தில் சேரும் குப்பைகளை எக்காரணம் கொண்டும் எரிக்காமல் இருத்தல், பள்ளி வளாகத்தில் சேரும் தேவையற்ற குப்பைகளை மேலாண்மை செய்தல், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை இனம் பிரித்தல் மற்றும் மறுசுழற்சிக்காக உள்ளுர், நிர்வாகத்திடம் திடக் கழிவுகளை ஒப்படைத்தல், தாழ்நிலை மற்றும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளை முறையாக தூய்மை செய்து பாதுகாப்பான முறையில் பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் மூலம் பள்ளி மற்றும் வளாகத்தை தூய்மையாக மிளிரச் செய்ய தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் முகமது அப்துல்லா, பள்ளி முதல்வர் அருளானந்தன், பூந்தமல்லி ஒன்றிய சேர்மன் பூவை ஜெயக்குமார், பூந்தமல்லி நகர் மன்ற துணை தலைவர் ஸ்ரீதர், நகராட்சி ஆணையாளர் லதா, வட்டாட்சியர் மாலினி, பூந்தமல்லி திமுக நகர செயலாளர் திருமலை, ஒன்றிய செயலாளர் கமலேஷ், மாவட்ட துணை செயலாளர் காயத்ரி தர், மாவட்ட பிரதிநிதி லயன் சுதாகர், மற்றும் நகர் மன்ற உறுப்பினர் தீபா யுவராஜ், திமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பூந்தமல்லி பார்வை குறைபாடுடையோர் அரசு பள்ளியில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்: தொடர் நடவடிக்கைக்கு மூன்று குழுக்கள் அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: