வங்கதேசத்தில் இன்று பொதுத்தேர்தல்: பிரதமர் ஹசீனா ஆதிக்கம்

டாக்கா: வங்கதேசத்தில் இன்று பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. இதில் பிரதமர் ஷேக் ஹசீனா 4வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.அண்டை நாடான வங்கதேசத்தில் 12வது பொதுத்தேர்தல் இன்று நடக்க உள்ளது. இதில் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆளும் அவாமி லீக் உட்பட 27 கட்சிகளை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 436 பேர் சுயேச்சைகள். மொத்தம் 11.9 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் 42,000 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு 8 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இத்தேர்தலை முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) புறக்கணித்துள்ளது. அக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான கலிதா ஜியா (78) ஊழல் குற்றச்சாட்டில் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் சட்டவிரோத ஆட்சி நடப்பதாக குற்றம்சாட்டி தேர்தலை புறக்கணித்துள்ள பிஎன்பி கட்சி 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கியது. இதனால், ஷேக் ஹசீனா மீண்டும் 4வது முறையாக வெற்றி பெற்று பிரதமர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2009ம் ஆண்டு முதல் இவர் தொடர்ந்து வங்கதேச பிரதமராக இருந்து வருகிறார்.இன்று வாக்குபதிவு முடிந்ததும், நாளை தேர்தல் முடிவுகள் தெரியவரும் என வங்கதேச தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2 பள்ளிக்கு தீ வைப்பு: வன்முறையால் பதற்றம்
வங்கதேசத்தில் கடந்த 2019ல் பொதுத்தேர்தலின் போது கடும் வன்முறை வெடித்தது. அதே போல இம்முறையும் தேர்தலுக்கு முன்பாக வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் சயீதாபாத் பகுதியில் பீனாபோல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 5 பயணிகள் பலியாகினர். இந்நிலையில், நேற்று சிட்டகாங்க் மற்றும் காஜிபூரில் வாக்குச்சாவடி மையங்களாக உள்ள 2 அரசு பள்ளிகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

The post வங்கதேசத்தில் இன்று பொதுத்தேர்தல்: பிரதமர் ஹசீனா ஆதிக்கம் appeared first on Dinakaran.

Related Stories: