காங்கிரசில் இணைந்த நிலையில் சர்மிளாவின் கணவர் தெலுங்கு தேசம் தலைவருடன் சந்திப்பு: வரும் தேர்தலில் கூட்டணி அமைய வாய்ப்பு

திருமலை: சர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில் அவரது கணவர், தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவரை சந்தித்திருப்பதால் வரும் தேர்தலில் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த தெலுங்கு தேசம் முயற்சித்து வருகிறது. இதேபோன்று காங்கிரஸ் கட்சியும் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் காங்கிரசுக்கென மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர்கள் யாரும் கிடைக்காததால் கட்சியை பலப்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டது. இதனால் தெலங்கானாவில் தனிகட்சி தொடங்கிய ஜெகன்மோகனின் தங்கை ஒய்எஸ்.சர்மிளாவை நேற்று முன்தினம் காங்கிரசில் இணைத்துள்ளது. அவருக்கு ஓரிரு நாட்களில் முக்கிய பொறுப்பு வழங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் காங்கிரசின் கோட்டையாக இருந்தது. ஆனால் ராஜசேகரின் மறைவுக்கு பின்னர் அவரது மகன் ஜெகன்மோகன், தனிக்கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்தார். இதனால் காங்கிரஸ் அதிகளவு பாதிப்பை சந்தித்தது. எனவே சர்மிளா மூலம் கட்சியை பலப்படுத்தி ஆந்திராவில் மீண்டும் ஆட்சியமைக்க காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. இதற்காக ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியுடன் மறைமுக கூட்டணி அமைத்து காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் டெல்லி சென்று ஒய்எஸ் சர்மிளா காங்கிரசில் இணைந்தார்.

அதேவேளையில் ஆந்திராவில் இருந்த சர்மிளாவின் கணவர் அனில், திடீரென கடப்பா மாவட்ட தெலுங்கு தேசம் கட்சி பொறுப்பாளரும், எம்எல்சியுமான பிடெக் ரவியை சந்தித்து பேசியுள்ளார். சந்திரபாபுவின் `வலதுகரம்’ என குறிப்பிடப்படும் பிடெக் ரவியை, சர்மிளாவின் கணவர் சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து தெலுங்கு தேசம் கட்சியினர் கூறுகையில், ‘வரும் தேர்தலில் காங்கிரஸ்-தெலுங்கு தேசம் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக சர்மிளாவின் கணவர் அனில் பேசினார். இந்த சந்திப்பின்போது பல உடன்பாடுகள் குறித்து பேசினர். இவற்றை தங்கள் கட்சி மேலிடத்திற்கு தெரியப்படுத்துவதாக இருவரும் தெரிவித்துக்கொண்டனர்’ என தெரிவித்தனர். அடுத்த 3 மாதங்களில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், நடந்த இந்த சந்திப்பு ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post காங்கிரசில் இணைந்த நிலையில் சர்மிளாவின் கணவர் தெலுங்கு தேசம் தலைவருடன் சந்திப்பு: வரும் தேர்தலில் கூட்டணி அமைய வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: