திருத்தணியில் அமைச்சர் தொடங்கி வைத்தார் மாவட்டம் முழுவதும் 37 இடங்களில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாம்:  13 நாட்கள் நடக்கிறது  30 நாட்களுக்குள் தீர்வு

திருவள்ளூர், ஜன. 4: திருத்தணியில் நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாமினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கிவைத்து ஆய்வு செய்து பயனாளிகளுக்கு பிறப்பு, இருப்பிட, வருமான சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் தலைமை தாங்கினார். திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் தீபா, மாவட்ட தொழில் மைய மேலாளர் அ.சேகர், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மதுசூதனன், மாவட்ட சமூக நல அலுவலர் ரா.சுமதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், முன்னோடி வங்கி மேலாளர் அருள்ராஜா, உதவி இயக்குநர் வேலைவாய்ப்பு விஜயா, மின்வாரிய செயற்பொறியாளர் பாரிராஜ், உதவி செய்ய பொறியாளர் ராஜேந்திரன், வட்டாட்சியர் மதன், திமுக நகர செயலாளர் வினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, துணைத் தலைவர் சாமிராஜ், நகராட்சி ஆணையர் ந.அருள் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி முகாமை தொடங்கி வைத்து, ஆய்வு செய்து பயனாளிகளுக்கு பிறப்பு சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் வருமான சான்றிதழ்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48, நான் முதல்வன் போன்ற திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சேர்வதை உறுதி செய்திட மாவட்டந்தோறும் ‘‘கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் நேரடி களஆய்வு செய்தார். இதனை இன்னும் செம்மைப்படுத்திட பொதுமக்களின் தேவைகளும் அரசின் சேவைகளும் ஒரு குடையின்கீழ் சந்தித்து விரைவில் தீர்வுகள் கிடைக்கும் வகையிலும், ஏராளமான அரசு சேவைகள் அரசு அலுவலகங்களை நாடிச்சென்று பெறுவதை தவிர்த்து அவர்களின் இல்லத்திலிருந்தே இணைய வழி மூலமாகவே விண்ணப்பிக்கும் வகையில் பல்வேறு சேவைகளை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

விளிம்புநிலை மக்கள் மற்றும் விழிப்புணர்வு இல்லாத மக்கள், சேவைகளுக்கான இணைக்கப்பட வேண்டிய சான்றாவணங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் உள்ளோருக்கு உதவிடும் வகையிலும், அரசு சேவைகளை எளிதாக்கி அவர்களின் இருப்பிடத்திற்கே எடுத்துச் சென்று குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வழங்கிடும் வகையில் ‘மக்களுடன் முதல்வர்” திட்டம் செயல்படும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த டிசம்பர் 18ம் தேதி துவக்கி வைத்தார். அதன் அடிப்படையில், திருத்தணி நகராட்சிக்குட்பட்ட தோட்டக்கார மடம் சத்திரம் பகுதியில், ‘மக்களுடன் முதல்வர்” திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நமது மாவட்டத்தில், ஆவடி மாநகராட்சி, 6 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள் மற்றும் 23 ஊராட்சிகள் என மொத்தம் 37 முகாம்கள், 13 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாம்களில் வழங்கப்படும் மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.

இத்திட்டத்தின் கீழ் மின்சார வாரியம் சார்பாக, புதியமின் இணைப்பு, மின் கட்டணமாற்றங்கள், மின் இணைப்பு பெயர் மாற்றம், கூடுதல் மின்சுமை கட்டணங்கள் குறித்தும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக கட்டுமான வரைபட ஒப்புதல், சொத்துவரி, குடிநீர் வரி, பெயர் மாற்றங்கள், வர்த்தக உரிமம் வேண்டி, குடிநீர், கழிவுநீர் இணைப்பு, பிறப்பு, இறப்பு சான்றிதழ், திடக்கழிவு மேலாண்மை, காலி மனை வரிவிதிப்பு, சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பாக, பட்டாமாறுதல், பட்டா உட்பிரிவு, இணைய வழி பட்டா, நிலஅளவீடு (அத்து காண்பித்தல்), வாரிசு சான்றிதழ், சாதிசான்றிதழ், வருமானசான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்கள், முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், மாற்றுத் திறனாளி, முதிர்கன்னி, மூன்றாம் பாலினத்தோருக்கான உதவித் தொகைகள், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை சார்பாக கட்டுமான வரைபட ஒப்புதல், நில உபயோக மாற்றத்திற்கான ஒப்புதல், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடு வேண்டி விண்ணப்பம், வீட்டுவசதி வாரியத்தால் வழங்கப்பட்ட ஒதுக்கீடுகளுக்கான விற்பனை பத்திரம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாடு வாரியத்தால் வழங்கப்பட்ட ஒதுக்கீடுகளுக்கான ஆணை, விற்பனை பத்திரம் குறித்தும் சேவைகள் வழங்கப்பட உள்ளது.
அதே போல் காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட துறைக்கள் சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை சமர்ப்பித்து பயனடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆவடி: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 1, 2, 3, 4 ஆகிய வார்டு மக்களுக்கான மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் அனைத்து துறை பங்கேற்கும் சிறப்பு முகாம் மிட்டணமல்லி சமுதாய கூடத்தில் நேற்று நடந்தது. இதில் வருவாய்த்துறை, மாநகராட்சி, காவல்துறை, மின்சாரத்துறை, வீட்டு வசதி வாரியம், மாற்றுத்திறனாளி நலத்துறை, சமூக நலத்துறை, ஆதி திராவிடர்/ பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, தொழிலாளர் நலவாரியம், சமூக பாதுகாப்பு திட்டம், வேலைவாய்ப்பு துறை, மாவட்ட தொழில் மையம் என தனி தனி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. முகாமை ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் மற்றும் ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், துறை சார்ந்த அதிகாரிகள் மனுக்களை முறையாக பெற்று பதிலளிக்கின்றார்களா, முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா எனவும் ஆவடி சா.மு.நாசர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பிறகு பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரஹ்மான், ஆவடி மேயர் ஜி.உதயகுமார், மாநகர பொறுப்பாளர் சண்பிரகாஷ், மண்டல குழு தலைவர் அமுதா பேபி சேகர், ஜோதிலட்சுமி நாராயண பிரசாத், பகுதி செயலாளர்கள் பேபிசேகர், நாராயணபிரசாத், பொன் விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பெரியபாளையம்: பெரியபாளையம் அடுத்த ஆரணி பேரூராட்சி சார்பில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக எம்எல்ஏக்கள் டி.ஜே.கோவிந்தராஜன், துரை சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இந்த முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு ஆரணி பேரூராட்சிக்குட்பட்ட பொதுமக்களிடம் இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜெயக்குமார், ஆரணி பேரூராட்சி செயல் அலுவலர் அர்ஜுன், பெரியபாளையம் காவல் ஆய்வாளர் வெங்கடேசன், ஆரணி பேரூர் திமுக செயலாளர் முத்து, பேரூராட்சி தலைவர் ராஜேஸ்வரி, துணைத்தலைவர் சுகுமார், கவுன்சிலர்கள் கண்ணதாசன், ரகுமான்கான், ஆரணி பேரூர் திமுக பொருளாளர் கரிகாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post திருத்தணியில் அமைச்சர் தொடங்கி வைத்தார் மாவட்டம் முழுவதும் 37 இடங்களில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாம்:  13 நாட்கள் நடக்கிறது  30 நாட்களுக்குள் தீர்வு appeared first on Dinakaran.

Related Stories: