₹1.10 கோடி மதிப்பிலான காலணிகள் பதுக்கல்

ஓசூர், ஜன.4: ஓசூர் அருகே, ₹1.10 கோடி மதிப்பிலான விலை உயர்ந்த காலணிகளை கடத்திய 3 பேரை அத்திப்பள்ளி போலீசார் கைது செய்தனர். கர்நாடக மாநிலம், ஆனேக்கல் அருகே செட்டிஅள்ளி பகுதியில், பிரபலமான காலணியகம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து கடந்த 2 நாட்களுக்கு முன், ஒரு லாரியில் 1,558 ஜோடி விலை உயர்ந்த காலணிகளை ஏற்றி, பெங்களூரு அருகேயுள்ள அணுகுண்டனஹள்ளி சௌக்கிய சாலையில் உள்ள குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், லாரி அங்கு செல்லவில்லை. ரஜக்பாளையம் பகுதியில் உள்ள ஒரு அறையில் காலணிகளை அடுக்கி வைத்து விட்டு, லாரியை மட்டும் சாலையில் நிறுத்தி வைத்திருந்தனர். இதனை, கடையின் நிர்வாகிகள் ஜிபிஎஸ் மூலமாக கண்டுபிடித்தனர். பின்னர், இது குறித்து அத்திப்பள்ளி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.

அதன் பேரில், அத்திப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராகவேந்திரா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, காலணிகளை குடோனுக்கு கொண்டு செல்லாமல், ரஜக்பாளையம் பகுதியில் உள்ள அறை ஒன்றில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று, ₹1.10 கோடி மதிப்பிலான காலணிகளை பறிமுதல் செய்தனர். மேலும், அதனை கடத்திய சுபான் பாஷா(30), மன்சூர்அலி (26), சஹித்துல் ரஹ்மான் (26) ஆகிய 3பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், லாரி டிரைவருடன் கூட்டு சேர்ந்து காலணிகளை கடத்தியதை ஒப்புக்கொண்டனர். தலைமறைவான லாரி டிரைவர் உள்பட மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post ₹1.10 கோடி மதிப்பிலான காலணிகள் பதுக்கல் appeared first on Dinakaran.

Related Stories: