நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடியுடன் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு: கேலோ இந்தியா விளையாட்டு தொடக்க விழாவுக்கு அழைப்பு

சென்னை: கேலோ இந்தியா விளையாட்டு தொடக்க விழாவுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காகவும், விழாவுக்கு அழைக்கவும் பிரதமர் மோடியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் சந்திக்கிறார். இந்தியாவில் நீண்ட காலமாக கிரிக்கெட், ஹாக்கி மட்டுமே பிரபலமான விளையாட்டாக இருந்து வந்த நிலையில், மற்ற விளையாட்டுப் போட்டிகளிலும் ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச தளங்களில் பதக்கம் வெல்லும் திறமை வாய்ந்த வீரர்களை கண்டறிந்து பயிற்சி வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்தது.

இத்தகைய இளம் வீரர்களை கண்டறியும் நிகழ்வாகவே கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 2018 முதல் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. இந்தாண்டு தமிழகத்தில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு தீவிரமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் ஜனவரி 19 முதல் 31ம்தேதி வரை நடைபெறும் கேலோ போட்டிகளில் 5 ஆயிரத்தும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். நிறைவு விழா சென்னையில் நடத்தப்பட உள்ளது.

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழை பிரதமர் மோடியிடம் வழங்கி நிறைவு விழாவில் பங்கேற்க தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுக்க உள்ளார். இதற்காக நேற்று மாலை 4:30 மணி அளவில், சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தார். அவர் 5:15 மணிக்கு, சென்னையில் இருந்து டெல்லி செல்லும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி விமான நிலையத்தில் அவரை திமுகவினர் வரவேற்றனர். அவர் சாணக்கியபுரியில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்தில் நேற்றிரவு தங்கினார். இன்று பிற்பகலில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசுகிறார். அப்போது கேலா இந்தியா விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழை வழங்கி நிறைவு விழாவில் பங்கேற்கும் படி அழைப்பு விடுக்கிறார்.

அப்போது ஒன்றிய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூரையும் சந்திக்கிறார். அதை தொடர்ந்து, தமிழ்நாடு வளர்ச்சி திட்ட பணிகளுக்காக ஒன்றிய அமைச்சர்கள் சிலரை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடியை சந்திக்கும் போது, தமிழ்நாட்டில் புயல் பாதிப்பு மற்றும் பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரண பணிகளுக்காக உரிய நிதியை தமிழகத்துக்கு ஒதுக்கும்படி கோரிக்கை விடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. டெல்லி சென்றுள்ள அவருடன், செயலாளர் அதுல்ய மிஸ்ரா, மேகநாத் ரெட்டி ஆகியோரும் சென்றுள்ளனர்.

* பொங்கல் தொகுப்புடன் ரொக்கம் முதல்வர் முடிவெடுப்பார்

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட வடசென்னையை சேர்ந்த 30 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அடையாறில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, பயனாளிகள் 100 பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கி, பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களையும் கொடியசைத்து அனுப்பி வைத்தார். அப்போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை தமிழகத்திற்கு வழங்கி உள்ளனர். வரும் 19ம் தேதி முதல் 31ம்தேதி வரை இப்போட்டிகள் நடைபெற உள்ளது. இதன் நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுப்பதற்காக டெல்லி செல்கிறேன்.

பிரதமர் மோடியை சந்தித்து இப்போட்டிகளுக்கான அழைப்பிதழை கொடுக்க உள்ளேன். மேலும், தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய மழை வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண தொகையை கூடுதலாக வழங்கவும் பிரதமரிடம் கட்டாயம் வலியுறுத்தி கேட்பேன். புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரடியாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டு சென்றுள்ளார். அதன்படி, தமிழகம் கேட்கும் நிவாரண தொகையை ஒன்றிய அரசு விரைவில் வழங்கும் என்று நம்புவோம். பொங்கல் தொகுப்பில் ரூ.1000 ரொக்க தொகை தர வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்படும் நிலையில், அதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார். சேலத்தில் நடைபெற உள்ள இளைஞர் அணி மாநாடு தேதி குறித்து ஆலோசித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும். இம்மாத இறுதிக்குள் மாநாடு நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

The post நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடியுடன் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு: கேலோ இந்தியா விளையாட்டு தொடக்க விழாவுக்கு அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: