ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி தி.நகர் வெங்கடேஸ்வரா கோயிலில் ஆன்மிக சொற்பொழிவு தொடக்கம்: 26ம் தேதி வரை நடக்கிறது

சென்னை:உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 22ல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் ராமஜென்மபூமி அறக்கட்டளை சார்பில் செய்யப்பட்டு வருகிறது. திறப்பு விழா அன்று நண்பகல் 12.45 மணி அளவில் கோயில் கருவறையில் ராம் லல்லா எனப்படும் 5 வயது மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தின்  வெங்கடேஸ்வரா கோயிலில் சிறப்பு சொற்பொழிவு மற்றும் இசை நிகழ்ச்சி நேற்று தொடங்கி வரும் 26ம் தேதி வரை நடக்கிறது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் ராம ஜென்ம பூமி தீர்த்த கேத்ரா அறக்கட்டளை அறங்காவலர் குழு உறுப்பினர் கே.பராசரன், விஸ்வ இந்து பரிஷத் தலைவர் வேதாந்தம், ஆன்மிக சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி திருப்பதி தேவஸ்தான ஆலோசனை தலைவர் ஏ.ஜெ.சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் வெங்கடேஸ்வரா கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த 10 அடி ராமர் சிலைக்கு ரோஜா மலர்தூவி சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது. பின்னர் ராமர் வரலாறு மற்றும் ராமர் கோயில் குறித்தான ஆன்மிக சொற்பொழிவை நிகழ்த்தினர். இதில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு அங்கிருந்த ராமர் சிலையை வழிபாடு செய்தனர்.

The post ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி தி.நகர் வெங்கடேஸ்வரா கோயிலில் ஆன்மிக சொற்பொழிவு தொடக்கம்: 26ம் தேதி வரை நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: