புதுடெல்லி: இந்திய மல்யுத்த விளையாட்டு விவகாரத்தில் திடீர் திருப்பமாக சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத்துக்கு எதிராக 300க்கும் மேலான இளம் வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தை துவக்கியுள்ளனர். மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த புகாரில் பாஜ எம்பி.யும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்க கோரி வீராங்கனைகள் கடந்த ஆண்டு போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து,மல்யுத்த கூட்டமைப்பு பதவியில் இருந்து அவர் விலகினார். அதன் பிறகு நடந்த மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் தேர்தலில் பிரிஜ் பூஷனின் ஆதரவாளர் சஞ்சய் சிங் வெற்றி பெற்றார்.
அதற்கு மல்யுத்த வீராங்கனைகளிடம் எதிர்ப்பு கிளம்பியது. அதையடுத்து, சாக்ஷி மாலிக் மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் தங்கள் விருதுகளை ஒன்றிய அரசிடம் திரும்ப ஒப்படைத்தனர். இந்நிலையில், உ.பி, அரியானா மாநிலங்களிலிருந்து வந்த 300க்கும் மேற்பட்ட இளம் வீரர், வீராங்கனைகள் நேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு போட்டியில் எதுவும் கலந்து கொள்ள முடியாததால், தங்கள் வாழ்வில் ஒரு ஆண்டு விரையம் ஆனதாகவும் அதற்கு மாலிக், பஜ்ரங், வினேஷ் ஆகியோர் தான் காரணம் என்று குற்றம் சாட்டினர். மூத்த வீரர்களுக்கு எதிராக இளம் வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா, வினேஷ்க்கு எதிராக களமிறங்கிய இளம் மல்யுத்த வீரர்கள்: 300க்கும் மேற்பட்டோர் டெல்லியில் போராட்டம் appeared first on Dinakaran.