ஆந்திரா உள்ளிட்ட 3 மாநிலங்களில் அதிகாரிகளை மிரட்டி பல லட்சம் பறிப்பு: போலி விஜிலென்ஸ் ஐஜி கைது

திருமலை: ஆந்திரா உள்ளிட்ட 3 மாநில உயரதிகாரிகளை மிரட்டி பல லட்ச ரூபாயை பறித்த போலி விஜிலென்ஸ் ஐஜி கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் அனந்தப்புரம் மாவட்டம், வேலமட்டியை சேர்ந்தவர் வாசு (35). இவருக்கு மங்களஸ்ரீ, சீனிவாசலு என்ற பெயர்களும் உண்டு. இவர் செயின் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அவ்வப்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார். இந்நிலையில் சிறிய சிறிய திருட்டுகளில் சிக்கி, சிறைக்கு சென்று திரும்புவதற்கு பதில், பெரிய அளவில் மோசடி செய்து பல கோடி ரூபாய் சம்பாதிக்க வாசு திட்டமிட்டார். அதற்கு, போலீஸ் உயரதிகாரிகள்போல் பேசி நடித்து மற்றவர்களிடம் பணம் பறிக்க முடிவு செய்தார். அதன்படி சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த வாசு, யூடியூப் பார்த்து மோசடி செய்வது குறித்து அறிந்து கொண்டாராம்.

இதனிடையே லஞ்ச வழக்குகளில் சிக்கிய அதிகாரிகளின் பட்டியலை சேகரிக்க தொடங்கினார். மேலும் கர்நாடகா, தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் பத்திரப்பதிவு, சிறைத்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்களை குறி வைத்து பட்டியலை தயாரித்துள்ளார். அதிகளவில் லஞ்சம் வாங்குவோரிடம் நேரடியாக செல்போனில் தொடர்புகொண்டு, ‘நான் லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி அலுவலகத்தில் இருந்து பேசுகிறேன், நீங்கள் லஞ்சம் வாங்குவது தொடர்பாக ஆதாரங்களுடன் புகார்கள் வந்துள்ளது. நடவடிக்கை எடுக்காமல் இருக்க, எனக்கு பணம் தரவேண்டும்’ என கேட்டு ஒரு குறிப்பிட்ட தொகையை பேரம் பேசுவாராம்.

குறிப்பாக பலதுறை அதிகாரிகளிடம் பேசும்போது, அவர்களது உயரதிகாரிகள் பேசுவதைபோன்று நடித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பயத்தில் பலர் பல லட்சம் ரூபாயை வாசு தெரிவித்த எண்ணுக்கு போன் பே மூலம் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதேபோல் ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள சிறைத்துறை உள்ளிட்ட பிற துறை உயரதிகாரிகளையும் தொடர்பு கொண்டு பணம் பறித்து வந்துள்ளார். இதன்மூலம் அவர் பல லட்ச ரூபாயை பறித்ததாக கூறப்படுகிறது.

இதேபோல் அம்பேத்கர் கோனசீமா மாவட்டம், மண்டபேட் ஊரக காவல் நிலையத்தில் ஏஎஸ்ஐயாக பணிபுரியும் வெங்கடேஸ்வரராவுக்கு செல்போனில் பேசிய வாசு, தான் லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி எனக்கூறி ₹3 லட்சம் வசூலித்துள்ளார். இதுகுறித்து ரூரல் போலீசில் கடந்த மாதம் 16ம் தேதி வெங்கடேஸ்வரராவ் புகார் அளித்தார். இதேபோல் பாதிக்கப்பட்ட பல அதிகாரிகளும் புகார்கள் அளிக்க தொடங்கினர். அதன்பேரில் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா என 3 மாநிலங்களில் அந்தந்த மாநில போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் ராஜமகேந்திரவரம் பகுதியில் உள்ள ரயில் நிலைய சைக்கிள் ஸ்டாண்ட் பகுதியில் பதுங்கியிருந்த வாசுவை, ஆந்திர, கர்நாடக போலீசார் நேற்று சுற்றிவளைத்து கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

The post ஆந்திரா உள்ளிட்ட 3 மாநிலங்களில் அதிகாரிகளை மிரட்டி பல லட்சம் பறிப்பு: போலி விஜிலென்ஸ் ஐஜி கைது appeared first on Dinakaran.

Related Stories: