பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கு பொதுமக்களிடம் கருத்து கேட்பு: மேயர் முன்னிலையில் வரும் 8ம்தேதி நடக்கிறது

சென்னை, ஜன.3: பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம், மேயர் பிரியா முன்னிலையில் வரும் 8ம்தேதி பள்ளிக்கரணையில் நடைபெறுகிறது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினசரி சராசரியாக 5,100 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்படுகின்றன. இவை பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்களில் கொட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பல ஆண்டுகளாக கொட்டப்பட்ட குப்பை கழிவுகளை ₹354 கோடி மதிப்பீட்டில் பயோ-மைனிங் முறையில் பிரித்தெடுத்து, நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இதற்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த குப்பை கொட்டும் வளாகத்தில், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான கருத்து கேட்பு கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் சுற்றுச்சூழல் பூங்கா (எக்கோ பார்க்) அமைப்பது தொடர்பான பொதுமக்கள் பங்களிப்பு கூட்டம், வரும் 8ம் தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் சென்னை மாநகராட்சியின் சமுதாய நலக்கூடம், ஐ.ஐ.டி. காலனி, பள்ளிக்கரணை, சென்னை-600 100 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.மேயர் பிரியா, ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கு பொதுமக்களிடம் கருத்து கேட்பு: மேயர் முன்னிலையில் வரும் 8ம்தேதி நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: