பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அங்கீகாரம்: விதிமுறைகளை வெளியிட்டது ஏ.ஐ.சி.டி.இ

சென்னை: பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அங்கீகாரம் வழங்குவது தொடர்பான விதிமுறைகள், கொள்கைகளை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) வெளியிட்டுள்ளது. அதன்படி, குறைந்தபட்சம் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் 10 ஆண்டுகள் செயல்பட்டிருக்க வேண்டும். அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர்களில் 50 சதவீதம் பேர் வழக்கமான அடிப்படையில் பணியாற்ற வேண்டும். குறைந்தது 60 சதவீத ஆசிரியர்கள் 5 ஆண்டுக்கு மேல் பணி அணுபவம் பெற்றிருப்பதும், 50 சதவீதத்துக்கு மேற்பட்டோர் 3 ஆண்டுகள் அதே கல்வி நிறுவனங்களில் பணியாற்றி இருப்பதும் அவசியம். அதேபோல், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிமுறைகளின்படி, போதுமான உள்கட்டமைப்பு இருக்க வேண்டும்.

கடந்த 3 கல்வி ஆண்டுகளில் நிறுவனத்தின் சேர்க்கை நிலை 80 சதவீதத்துக்கு குறைவில்லாமலும், அனைத்து செமஸ்டர்களிலும் தேர்ச்சி முடிவுகள் 60 சதவீதத்துக்கு மேலும் இருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளை பின்பற்றி, தன்னாட்சி அங்கீகாரம் பெற விரும்பும் பாலிடெக்னிக் கல்லூரிகள் அக்டோபர் 31ம் தேதிக்குள் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மாநில அரசு சார்பில் ஒரு உறுப்பினர், மாநில வாரியம் தரப்பில் ஒரு உறுப்பினர், பாட வல்லுனர்கள், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் சார்பில் ஒரு உறுப்பினர் என குழுவை அமைத்து, சரிபார்க்கப்பட வேண்டும். அந்த குழுவினர் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு நேரடி ஆய்வுக்கு சென்று 100 மதிப்பெண்களுக்கு ஆய்வு முடிவை சமர்ப்பிக்க வேண்டும். அதில் 70 மதிப்பெண்ணுக்கு மேல் பெறும் நிறுவனங்களின் பெயரை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 30க்குள் பரிந்துரைக்க வேண்டும் என ஏ.ஐ.சி.டி.இ. ஆலோசகர் மம்தா அகர்வால் தெரிவித்துள்ளார்.

The post பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அங்கீகாரம்: விதிமுறைகளை வெளியிட்டது ஏ.ஐ.சி.டி.இ appeared first on Dinakaran.

Related Stories: