தென் ஆப்ரிக்கா அசத்தியது இந்தியா இன்னிங்ஸ் தோல்வி

செஞ்சுரியன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 2வது இன்னிங்சில் வெறும் 131 ரன்னில் சுருண்டு, இன்னிங்ஸ் தோல்வியை தழுவியது. இந்தியா, தென் ஆப்ரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடந்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 245 ரன் எடுத்த நிலையில், 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்ரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 256 ரன்களுடன் இருந்தது. எல்கர் 140, யான்சென் 3 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இதைத் தொடர்ந்து 3ம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் எல்கர் 185 ரன் குவித்து தாக்கூர் பந்தில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அசத்தலாக ஆடிய யான்சென் அரைசதம் அடித்தார். முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 408 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. யான்சென் 84 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

163 ரன் பின்தங்கிய நிலையில், 2ம் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, தென் ஆப்ரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தட்டுத்தடுமாறியது. பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்த கோஹ்லி (76 ரன்), சுப்மன் கில் (26) தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் நடையை கட்டினர். கேப்டன் ரோகித் ஷர்மா டக் அவுட் ஆனார். இந்திய அணி 2வது இன்னிங்சில் 34.1 ஓவரில் 131 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பர்கர் 4, யான்சென் 3, ரபாடா 2 விக்கெட் வீழ்த்தி இந்தியாவை வாரி சுருட்டினர். இதன் மூலம், 5 நாள் டெஸ்டில் மூன்றே நாளில், இன்னிங்ஸ் மற்றும் 32 ரன் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. சிறப்பாக பேட் செய்த தென் ஆப்ரிக்காவின் எல்கர் ஆட்டநாயகன் விருது பெற்றார். 2வது மற்றும் கடைசி டெஸ்ட் வரும் 3ம் தேதி கேப்டவுனில் தொடங்க உள்ளது.

The post தென் ஆப்ரிக்கா அசத்தியது இந்தியா இன்னிங்ஸ் தோல்வி appeared first on Dinakaran.

Related Stories: