2005-06ல் நிலம் வாங்கி விற்ற விவகாரம் ஈடி விசாரணை வளையத்தில் முதல் முறையாக பிரியங்கா: கணவர் ராபர்ட் வத்ராவை தொடர்ந்து குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்ப்பு

புதுடெல்லி: அரியானாவில் 2005-06ம் ஆண்டில் நிலம் வாங்கி விற்ற விவகாரத்தில் கணவர் ராபர்ட் வத்ராவை தொடர்ந்து முதல் முறையாக பிரியங்கா காந்தியின் பெயர் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த என்ஆர்ஐ தொழிலதிபர் சி.சி.தம்பி மற்றும் ஆயுத இடைத்தரகர் சஞ்சய் பண்டாரியின் உறவினர் சுமித் சாதாவுக்கு எதிரான சட்ட விரோத பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கடந்த நவம்பர் மாதம் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

தற்போது இந்த வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ரா பெயர் சேர்க்கப்பட்டதாக கடந்த 2 நாட்களுக்கு முன் தகவல் வெளியான நிலையில், இதே வழக்கில் பிரியங்கா காந்தியின் பெயரும் சேர்க்கப்பட்டிருப்பதாக நேற்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் இதற்கு முன் பலமுறை ராபர்ட் வத்ராவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில் அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். ஆனால் தற்போது முதல் முறையாக பிரியங்கா காந்தியின் பெயர் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் இருவரும் குற்றவாளிகள் என குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்படவில்லை. முக்கிய குற்றவாளிகளான சி.சி.தம்பிக்கு நெருக்கமானவர்களாக இருந்ததாக அமலாக்கத்துறை கூறி உள்ளது. இந்த வழக்கு வரும் ஜனவரி 29ம் தேதிக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

சிசி தம்பி அரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள அமீர்பூர் கிராமத்தில் 2005-2008ம் ஆண்டில் 486 ஏக்கர் நிலத்தை டெல்லியை சேர்ந்த ரியல் எஸ்டேட் ஏஜென்ட் எச்.எல்.பஹ்வாவிடம் வாங்கி உள்ளதாக அமலாக்கத்துறை கூறி உள்ளது. அதே ஏஜென்டிடம் ராபர்ட் வத்ரா அமீர்பூரில் 2005-06ல் 40.08 ஏக்கர் அளவுள்ள 3 நிலத்தை வாங்கி அவரிடமே 2010ல் விற்றுள்ளார். ராபர்ட் வத்ராவின் மனைவி பிரியங்கா காந்தி அமீர்பூரில் 5 ஏக்கர் விவசாய நிலத்தை பஹ்வாவிடம் வாங்கி 2010ல் விற்றுள்ளார். இதற்கான பணம் அனைத்தும் ரொக்கமாக தரப்பட்டுள்ளது. மேலும், ராபர்ட் வத்ரா முழு பணத்தையும் தரவில்லை என்றும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

* தேர்தல் நெருங்குவதே காரணம்
இந்த விவகாரம் குறித்து இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு கூறுகையில், ‘‘நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் காங்கிரஸ் தலைவர்களை ஒன்றிய அரசின் தூண்டுதலோடு அமலாக்கத்துறை குறிவைக்கிறது’’ என குற்றம் சாட்டி உள்ளார். பிரியங்கா காந்தி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

The post 2005-06ல் நிலம் வாங்கி விற்ற விவகாரம் ஈடி விசாரணை வளையத்தில் முதல் முறையாக பிரியங்கா: கணவர் ராபர்ட் வத்ராவை தொடர்ந்து குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: