சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ரூ30 லட்சத்தில் 45 டன் உணவு பொருட்களை நெல்லை-தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்க தலைவர் ஆனந்தராஜ், நிர்வாக செயலாளர் சந்திரசேகர், துணை தலைவர்கள் ராஜாராம், ரவிச்சந்திரன், கணேசன், நிர்வாக குழு உறுப்பினர்கள் பெரியசாமி, சீனிவாசன், சதானந்தம், அருண், ஆனந்தசெல்வன், சாந்தகுமார், பூலோக பாண்டியன், செந்தில் குமார் ஆகியோர் வழங்கினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், \\”நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் வெள்ளம் கரைபுரண்டு ஓடி பள்ளமான பகுதிகளை சூழ்ந்தது. வரலாறு காணாத மழையால் ஒரு வாரமாக மொத்த மாவட்டமும் முடங்கியது. அனைத்து மக்களும் பால், உணவு கிடைக்காமல் மரண பீதியில் இருந்தனர்.
மின்சாரம் இல்லாமல் தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டு கற்காலத்தில் இருந்ததுபோன்ற சூழல் இருந்தது. மழைநீர் வடிந்து இழப்பீடுகளை கணக்கிடும்போது தொலைந்துபோன ஆடுகள், மாடுகள், நண்பர்களை காணாமல் தவித்தனர். இந்த மழையில் 35 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. இதுபோல் வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரத்தை தொலைத்து நிற்கின்றனர். சின்ன மற்றும் பெரிய வியாபாரிகள் அனைவரும் பாதிக்கப் பட்டுள்ளனர். பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கு இழப்பீடு வழங்கவேண்டும். வங்கிகள் மூலம் வியாபாரிகளுக்கு வட்டி இல்லாத கடன் வழங்க வேண்டும். தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இடிந்துபோன பழைய வீடுகளுக்கு பதிலாக புதிய வீடு கட்டித்தர ஏற்பாடு செய்யவேண்டும். மக்களுக்கு நிவாரண நிதியாக ஒரு குடும்பத்திற்கு ரூ25 ஆயிரம் வழங்க வேண்டும்.
உடைந்துபோன கிணறுகளை சீர்செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைஎடுக்கவேண்டும். போர்க்கால அடிப்படையில் சாலைகளை சீர் செய்யவேண்டும். தண்ணீரில் மூழ்கி அழுகிய விவசாய பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க ஒன்றிய அரசு தமிழகத்துக்கான நிதியை விரைவாக வழங்கிடவேண்டும் என நெல்லை-தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்கம் கேட்டுக்கொள்கிறது.
The post நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ரூ30 லட்சத்தில் 45 டன் உணவு பொருட்கள்: நெல்லை-தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்கம் வழங்கியது appeared first on Dinakaran.