பண்டிகை, பள்ளி விடுமுறை பூட்டியிருக்கும் வீடுகளை கண்காணிக்க உத்தரவு

 

கோவை, டிச.25: கோவையில் பள்ளி விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை காலமாக இருப்பதால் பொதுமக்கள் சிலர் உறவினர்கள் வீடுகளுக்கு வெளியூர் சென்றிருப்பதாக தெரிகிறது. பூட்டியிருக்கும் வீடுகளை கண்காணிக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போத்தனூர், சுந்தராபுரம், பீளமேடு, சிங்காநல்லூர், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதியில் அதிகளவு திருட்டு நடக்கிறது. இந்த பகுதியில் இரவு நேர ரோந்து பணி அதிகமாக நடத்த வேண்டும்.

பொதுமக்கள் தங்களது வீடுகளை பூட்டியிருந்தால் அது தொடர்பாக அருகேயுள்ள போலீஸ் ஸ்டேஷனில் தகவல் தெரிவிக்கலாம். வீட்டில் அதிக நகை, பணம் வைத்து செல்ல வேண்டாம். பொதுமக்கள் வங்கி லாக்கரில் நகை, பணம் வைத்து செல்ல முன் வரவேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஆண்டு இறுதி மாதமாக இருப்பதால் போலீஸ் ஸ்டேஷன் வாரியாக கிடப்பில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண வேண்டும். அதிகளவில் நடந்து வரும் குற்றங்கள் குறித்து விசாரிக்க வேண்டும். திருட்டு, வழிப்பறி, நகை பறிப்பு தடுக்க தீவிர ரோந்து பணி நடத்த வேண்டும்.

ஹிஸ்டரி ரிக்கார்டு உள்ள குற்றவாளிகள் விவரங்களை முறையாக தெரிந்து அந்த நபர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். ஓட்டல், லாட்ஜ்களில் சந்தேக நபர்கள் உள்ளார்களா என கண்காணிக்க வேண்டும். பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் தகராறு செய்யும் நபர்கள், கத்தி காட்டி மிரட்டும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என போலீசாருக்கு உயரதிகாரிகளும் உத்தரவிட்டுள்ளனர். சட்ட விரோத செயல்பாடுகளை தடுக்கும் வகையில் பணியாற்ற வேண்டும். வழக்கில் தேடப்பட்டு வரும் நபர்களை விரைவாக பிடிக்க வேண்டும். போதை மாத்திரை, கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

The post பண்டிகை, பள்ளி விடுமுறை பூட்டியிருக்கும் வீடுகளை கண்காணிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: