467வது ஆண்டு கந்தூரி விழா நாகூர் ஆண்டவர் சந்தனக்கூடு ஊர்வலம் கோலாகலம்: ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்பு

நாகப்பட்டினம்: நாகூர் ஆண்டவர் தர்கா 467வது ஆண்டு கந்தூரி விழாவை முன்னிட்டு நேற்றிரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதங்களுடன் சந்தன கூடு ஊர்வலம் கோலாகலமாக நடந்தது. இதில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். நாகை மாவட்டம் நாகூரில் புகழ்பெற்ற ஆண்டவர் தர்காவ 467-வது கந்தூரி விழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 21ம் தேதி வாணவேடிக்கையும், 22ம் தேதி இரவு பீர் அமர வைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று (23ம் தேதி) இரவு நடந்தது. முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை காலை 10.35 மணிக்கு அங்கு நாகூர் வந்தார்.

அப்போது முறைப்படி நகரா வாசித்தும், மேளம் தாளம் முழங்கியும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தர்கா உள்ளே சென்ற அவர் பெரிய ஆண்டர் சமாதி முன்பு பிரார்த்தனை செய்துவிட்டு சென்றார். நாகூர் தர்காவில் பாரம்பரிய முறைப்படி அரைக்கப்பட்ட சந்தனங்கள் குடங்களில் நிரப்பட்டு நாகப்பட்டினம் முஸ்லிம் ஜமாத்தார்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சந்தன குடங்களை பெற்று நாகப்பட்டினம் யாஹூசைன் பள்ளிவாசல் வந்தடைந்தது. இதன்பின் சந்தன கூடு ஊர்வலம் யாஹூசைன் பள்ளிவாசலில் இருந்து இரவு 7மணியளவில் புறப்பட்டு அபிராமி அம்மன் திருவாசல் வந்தது. உடன் சாம்பிராணி சட்டி ரதம், நகராமேடை மற்றும் பல்வேறு மின் அலங்கார ரதங்கள் சந்தன கூடு சென்ற ரதத்தின் முன்னும், பின்னும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அணிவகுத்து சென்றன.

இந்த சந்தனக்கூடு ஊர்வலம் நாகப்பட்டினம் புதுப்பள்ளி தெரு வழியாக நூல்கடை தெரு, வெங்காயகடை தெரு, உள்ளிட்ட தெருக்கள் வழியாக சென்றது.  பின்னர் அண்ணாசிலை, பப்ளிக் ஆபீஸ் ரோடு வழியாக நாகூர் எல்லையை சந்தனக்கூடு சென்றடைந்தது. இதைத் தொடர்ந்து அங்குள்ள கூட்டுப்பாத்திகா மண்டபத்தில் பாத்திகா ஓதிய பின்னர் வாணக்காரத்தெரு, தெற்கு தெரு, அலங்காரவாசல் வழியாக வந்து அங்குள்ள பாரம்பரிய முறைகாரர் வீட்டில் சந்தன குடத்தை வாங்கி கூட்டில் வைக்கப்பட்டது.

இதையடுத்து கால்மாட்டு வாசல் வழியாக சந்தனக்குடம் தர்காவின் உள்ளே கொண்டு செல்லப்பட்டது. சந்தன கூடு ஊர்வலத்தை நாகப்பட்டினத்தில் இருந்து நாகூர் வரை பொதுமக்கள் தங்கள் வீடுகள் முன்பு நின்று கண்டு ரசித்தனர். இதை தொடர்ந்து இன்று (24ம் தேதி) அதிகாலை ஆண்டவரின் சமாதி அறைக்கு எடுத்து சொல்லப்பட்டது. தொடர்ந்து, தர்காவின் பரம்பரை கலிபா ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை(25ம் தேதி) கடற்கரைக்கு பீர் செல்லும் நிகழ்ச்சியும், வரும் 27ம் தேதி புனித கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

* ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட முயற்சி: 129 பேர் கைது
சந்தனக்கூடு விழாவில் பங்கேற்க தமிழ்நாடு ஆளுநர் ரவி சென்னையில் இருந்து நேற்று திருச்சிக்கு விமானம் மூலம் வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் திருவாரூர் வழியாக நாகூர் தர்காவிற்கு அவர் புறப்பட்டார். அப்போது கீழ்வேளூர் கச்சகம் சாலை சந்திப்பில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக சார்பில் ஏராளமானோர் திரண்டு இருந்தனர். அங்கு அவர்கள் ஆளுநர் வருவதற்கு 20 நிமிடங்களுக்கு முன் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 62 பேரை போலீசார் கைது செய்து கீழ்வேளூர் தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

இதேபோல் திருவாரூரிலிருந்து நாகை செல்லும் பைபாஸ் சாலையில் வாழவாய்க்கால் அருகே 10 பேரும், ரயில்வே மேம்பாலம் அருகே 5 பேரும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடியை கட்ட முயன்றனர். இவர்கள் அனைவரும் மா. கம்யூ., இ.கம்யூ. கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் தஞ்சையிலிருந்து ஆளுநர் திருவாரூர் வரும் வழியில் நீடாமங்கலத்தில் கருப்பு கொடி காட்ட முயன்ற இ.கம்யூ கட்சியை சேர்ந்த 25 பேரையும், கொரடாச்சேரி வெட்டாறுபாலம் அருகே மா. கம்யூ., இ.கம்யூ., கட்சியை சேர்ந்த 25 பேர் என மொத்தம் 67 பேர் கைது செய்யப்பட்டனர்.

The post 467வது ஆண்டு கந்தூரி விழா நாகூர் ஆண்டவர் சந்தனக்கூடு ஊர்வலம் கோலாகலம்: ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: