தஞ்சாவூர் நாகநாதர் கோயிலில் ஐம்பொன் சிலைகளை கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது

*நகைகள், வெள்ளி பொருட்கள் மீட்பு

தஞ்சாவூர் : தஞ்சாவூர் நாகநாதர் கோயிலில் 12 ஐம்பொன் சிலைகளை கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து நகைகள், வெள்ளி பொருட்களை போலீசார் மீட்டனர்.தஞ்சாவூரை அடுத்த பூக்குளம் பகுதியில் பழைய திருவையாறு சாலையில் 400 ஆண்டு பழமை வாய்ந்த வேதவள்ளி சமேத நாகநாதர் கோயிலில் கடந்த 17ம்தேதி நள்ளிரவு நடராஜர் உட்பட 12 ஐம்பொன் சாமிசிலைகள் மற்றும் சாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்த 9 கிராம் தங்க நகைகள், 16 கிராம் வெள்ளி பொருட்களை கொள்ளை போனது.

தஞ்சாவூர் மேற்கு இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் போலீசார் கோயிலுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கோயிலின் பின்புறம் உள்ள குளத்தின் கரையில் சாக்கு மூட்டையில் இருந்த 12 ஐம்பொன் சிலைகள் மட்டும் மீட்கப்பட்டது.

இதுகுறித்து தஞ்சாவூர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் தஞ்சாவூர் கரந்தை இரட்டைபிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த ஆனந்த் (27) என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், நாகநாதர் கோயிலில் 12 ஐம்பொன் சிலைகளை கொள்ளையடிக்க முயற்சி செய்ததும், பின்னர் வந்து எடுத்துக்கொள்ளலாம் என நினைத்து சிலைகளை குளத்தில் வீசிவிட்டு சென்றதும், சாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்த 9 கிராம் தங்க நகைகள் மற்றும் 16 கிராம் வெள்ளி பொருட்களை மட்டும் எடுத்து சென்றதும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் ஆனந்தை நேற்று கைது செய்து அவரிடமிருந்து நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கைப்பற்றினர்.

The post தஞ்சாவூர் நாகநாதர் கோயிலில் ஐம்பொன் சிலைகளை கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: