பிரிஜ்பூஷணின் விசுவாசியான சஞ்செய் சிங்கிற்கு எதிர்ப்பு.. பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிப்பதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவிப்பு!!

புதுடெல்லி: பத்மஸ்ரீ விருதை பிரதமரிடம் திருப்பி ஒப்படைப்பதாக இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புளியா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பாஜ எம்பி பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது ஒரு சிறுமி உட்பட 7 வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்தனர். பல்வேறு போராட்டங்கள், வழக்கு காரணமாக அவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டது. அதனால் பிரிஜ்பூஷண் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் பிரிஜ்பூஷணின் விசுவாசியான சஞ்ஜெய் சிங் தலைவராக தேர்வாகி உள்ளார். அனுமதிக்கப்பட்ட 51 வாக்குகளில் அவர் 40 வாக்குகள் பெற்றார்.மேலும் 4 துணைத் தலைவர்கள், 5 செயற்குழு உறுப்பினர்கள், பொருளாளர் என 15 பதவிகளில் பெரும்பான்மையான பதவிகளை பிரிஜ்பூஷண் ஆதரவாளர்களே கைப்பற்றி உள்ளனர். இந்த தேர்தல் முடிவுகள் வீரர்கள், வீராங்கனைகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பிரிஜ் பூஷன் ஆதரவாளர் சஞ்சய் சிங் இந்திய மல்யுத்த சங்க தலைவரானதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பாலியல் புகாரில் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் பத்மஸ்ரீ விருதை பிரதமர் மோடியிடம் திருப்பி ஒப்படைப்பதாக பஜ்ரங் புளியா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பஜ்ரங் புனியா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசு எனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளேன்,” என காட்டமாக பதிவிட்டுள்ளார். ஒலிம்பிக்கில் வெண்கலம், உலக மல்யுத்த போட்டியில் வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்களை பஜ்ரங் புனியா வென்றுள்ளார். பஜ்ரங் புனியாவிற்கு கடந்த 2019-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இதற்கு முன்னதாக சஞ்சய் சிங் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் மல்யுத்தத்தில் இருந்து விலகுவதாக சாக்ஷி மாலிக் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

The post பிரிஜ்பூஷணின் விசுவாசியான சஞ்செய் சிங்கிற்கு எதிர்ப்பு.. பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிப்பதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: