கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு காஸ் ஏஜென்சியின் தவறான அறிவிப்பால் தள்ளுமுள்ளு: 10 பேர் மயக்கம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் பாரத் காஸ் நிறுவனத்தின் லீமா காஸ் ஏஜென்சி சார்பில் ஆதார் விவரங்களை இன்றைக்குள் சமர்ப்பிக்காவிட்டால் காஸ் பதிவு செய்ய முடியாது என்ற அறிவிப்பால் ஒரே நாளில் ஆயிரம் பேர் கூடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அருகே பாரத் காஸ் நிறுவனத்தின் லீமா காஸ் ஏஜென்சி செயல்பட்டு வருகிறது. இந்த காஸ் ஏஜென்சி மூலம் கும்மிடிப்பூண்டியில் உள்ள 61 ஊராட்சிகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதில், இணைப்பைப் பெற்று பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஒரு வருட காலமாக காஸ் இணைப்பைப் பெற்றவர்களுக்கு, ஒன்றிய அரசின் மானியம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஆதார் உள்ளிட்ட விவரங்களை செலுத்தி பதிவிடுபவர்களுக்கு ஒன்றிய அரசின் மானியம் கிடைக்கும் என, காஸ் நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. எனவே, கடந்த சில நாட்களாக பொதுமக்கள் லீமா காஸ் ஏஜென்சியில் ஆதார் விவரங்களை தர குவிந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து, திங்கள் அன்று ஆதார் விபரங்களை பதிவிட வந்த ஒரு சிலரிடம் லீமா காஸ் ஏஜென்சி ஊழியர்கள் ஆதார் விவரங்களை பதிவிட இன்றே கடைசி நாள், இன்றைக்குள் பதிவிடா விட்டால் காஸ் மானியமும் வராது, இனிமேல் காஸ் புக் செய்யவும் முடியாது என அதிரடியாக கூறியுள்ளனர்.

மேலும், மேற்கண்ட காஸ் நிறுவன ஊழியர்கள் சிலரிடம் இலவச காஸ் இணைப்பு என்றும், சிலரிடம் மானிய தொகை கிடைக்கும் என்றும், சிலரிடம் ஆதார் விவரங்களை பதிவு செய்யாவிட்டால் இனிமேல் காஸ் வாங்க முடியாது என்றும் பல்வேறு தகவல்களை கூறி குழப்பியுள்ளனர். இந்த தகவல் கும்மிடிப்பூண்டி சுற்றுப்புற பகுதியில் காட்டுத்தீயாக பரவிய நிலையில் கும்மிடிப்பூண்டியில் ஒரே நாளில், ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லீமா காஸ் ஏஜென்சிக்கு வந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், குறிப்பாக யார் பெயரில் காஸ் இணைப்பு உள்ளதோ அவர்கள் வரவேண்டும் என கூறியிருந்ததால், காஸ் இணைப்பு பெயர் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் 200க்கும் மேற்பட்ட முதியோர்கள் மாற்றுத்திறனாளிகள் என 3 மணி நேரத்துக்கு மேலாக வரிசையில் காத்திருந்தனர்.

மேற்கண்ட லிமா காஸ் ஏஜென்சி இருந்த இடத்தில் பொதுமக்களுக்கு குடிக்க தண்ணீரும், கழிப்பறை வசதி செய்து தரப்படாத நிலையில் நீண்ட நேரம் வரிசையில் இருந்தவர்கள் தண்ணீர் குடிக்காமலும், இயற்கை உபாதையை கழிக்க இல்லாமலும் அவதிப்பட்டனர். மேலும், கூட்ட நெரிசலின் காரணமாக முதியோர்கள் பெண்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். இது குறித்து அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த ராஜேந்திரன், லோகநாதன் உள்ளிட்ட சம்பவ இடத்திற்கு வந்தனர். இந்த காஸ் ஏஜென்சி உரிமையாளரிடம் பொதுமக்களுக்கு ஏன் இப்படி சிரமத்தை ஏற்படுத்துகிறீர்கள் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், நிகழ்விடத்தில் கூடிய கூட்டத்தை ஒழுங்குபடுத்த, ஒரு ஆள் கூட இல்லை.

இதனால் ஏற்பட்ட நெரிசல் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதித்த நிலையில் கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலையில் பொதுமக்கள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி இருந்ததால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் இந்த பாரத் நிறுவனத்தின் லீமா காஸ் ஏஜென்சியின் பொறுப்பற்ற தன்மையால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இதுகுறித்து உண்மையான தகவல்களை காஸ் ஏஜென்சி நிறுவனம் தெரிவிக்க வேண்டும் என்றும், மேற்கண்ட காஸ் ஏஜென்சி நிறுவனத்தின் மீது பாரத் காஸ் நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு காஸ் ஏஜென்சியின் தவறான அறிவிப்பால் தள்ளுமுள்ளு: 10 பேர் மயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: