கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் உடைந்ததால் 13 கிராம மக்கள் தவிப்பு: சீரமைக்க எம்எல்ஏ உத்தரவு

திருவள்ளூர்: ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் அரக்கோணம் அருகே பாலாற்றில் கலந்து பிறகு திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் பாகசாலை அருகே உள்ள கொசஸ்தலையாற்றில் கலந்து அங்கிருந்து பூண்டி நீர்த்தேக்கத்துக்கு வருகிறது. திருவாலங்காடு ஒன்றியம், லட்சுமிவிலாசபுரத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றை மக்கள் கடந்து செல்ல தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. கடந்தாண்டு பெய்த கன மழையின் காரணமாக ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதையடுத்து தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட நிலையில் கடந்தவாரம் மிக்ஜாம் புயல் காரணமாக மீண்டும் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு லட்சுமி விலாசபுரம் பாலம் அடித்து செல்லப்பட்டது.

இதன்காரணமாக செஞ்சி, மதுரா கண்டிகை, பாகசாலை, சிற்றம்பாக்கம், தென்காரணை, பேரம்பாக்கம், மணவூர், குப்பம்கண்டிகை, பழையனூர், திருவாலங்காடு, ராஜபத்மாபுரம், ஜாகீர்மங்கலம் உள்ளிட்ட 12கிராம மக்கள், தனியார் நிறுவனங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட மணவூர் செல்ல வேண்டிய நிலையில் உள்ள லட்சுமிவிலாசபுரம் மக்கள் பாகசாலை வழியாக சுமார் 10 கி.மீட்டர் தூரம் சுற்றி செல்கின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அவசரமாக மருத்துவமனைக்கு செல்கின்றவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே சேதம் அடைந்துள்ள தரைப்பாலத்தை சீரமைத்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் இந்த பகுதியில் விரைவில் உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த நிலையில், திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் நேற்று, லட்சுமிவிலாசபுரம் கொசஸ்தலை ஆற்று தரைப்பாலத்தை ஆய்வு செய்தார். அப்போது ஒன்றிய செயலாளர் எஸ்.மகாலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வட்டார ஊராட்சி) செல்வகுமார், (கிராம ஊராட்சி) காளியம்மாள், பொறியாளர் பாலகிருஷ்ணன், ஒன்றிய குழு துணைத் தலைவர் சுஜாதா மகாலிங்கம், மாவட்ட கவுன்சிலர்கள் விஜயகுமாரி சரவணன், சரஸ்வதி சந்திரசேகர், மாவட்ட துணை செயலாளர் ஜெயபாரதி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் களாம்பாக்கம் பன்னீர்செல்வம், ஒன்றிய கவுன்சிலர் தினகரன், ஒன்றிய நிர்வாகிகள் சண்முகம், நீலாவதி சீனிவாசன், செந்தில்குமார், ஜெகதீசன், கிளை செயலாளர்கள் ஸ்ரீதரன், பூபாலன், தாஸ், முனுசாமி உள்ளிட்ட பலர் இருந்தனர். இதனிடையே பொது மக்களின் கோரிக்கையை ஏற்று போர்க்கால அடிப்படையில் சேதம் அடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

The post கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் உடைந்ததால் 13 கிராம மக்கள் தவிப்பு: சீரமைக்க எம்எல்ஏ உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: