சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் வரும் 23ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு

 

சேலம், டிச.12: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சேலம் கோட்டை அழகிரிநாதர் சுவாமி கோயிலில் டிச.23ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சேலம் பழைய பஸ் ஸ்டாண்டையொட்டி கோட்டை அழகிரிநாதர் கோயில் உள்ளது. மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் என்னும் மூன்று சிறப்பு அம்சங்களுடன் கூடி திருமணிமுத்தாறு நதியின் மேற்கரையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அழகிரிநாத சுவாமி சன்னதி, தாயார், ஆதிவேணுகோபால், ராமர், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், சந்தனகோபாலகிருஷ்ணர், விஷ்ணுதுர்க்கை மற்றும் ஆழ்வார், ஆச்சார்யாதிகள் சன்னதிகள் உள்ளன. இவ்வாறான சிறப்பு மிக்க இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு விழா விமர்சையாக கொண்டாடப்படும்.

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு இன்று (12ம் தேதி) முதல் 22ம் தேதி வரை பகல் உற்சவமும், 23ம் தேதி முதல் ஜன.3ம் தேதி வரை இராப்பத்து உற்சவமும் நடக்கிறது. டிச.23ம் தேதி அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது. அன்று மூலவர், தாயார், கருடாழ்வார், ஆஞ்சநேயர், ஆண்டாள், விஷ்ணுதுர்க்கை ஆகிய சுவாமிகளுக்கு தங்கக்கவசம் சாத்துப்படி நிகழ்ச்சி நடக்கிறது.சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு கோட்டை ெபருமாள் கோயில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய ஆங்காங்கே தடுப்புக்கட்டைகள் அமைக்கப்பட்டு வருகிறது. பரமபத வாசல் முழுக்க பெயிண்ட் அடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. கோயிலில் அனைத்து முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

The post சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் வரும் 23ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: