எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி

பொள்ளாச்சி: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து பாலக்காடு, பொள்ளாச்சி வழியாக மதுரைக்கு தினமும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. கடந்த 9ம் தேதி மாலை 4.15 மணிக்கு மதுரையில் இருந்து அமிர்தா எக்ஸ்பிரஸ் புறப்பட்டு இரவு 7:40 மணியளவில் பொள்ளாச்சியை வந்தடைந்தது. அதன்பின் சில நிமிடத்திற்கு பிறகு அந்த ரயில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் நோக்கி புறப்பட்டது. இந்த ரயில் பொள்ளாச்சி அடுத்த மீனாட்சிபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது பாரமேடு வழியாக செல்லும் தண்டவாளத்தின் மீது சுமார் அரை அடி நீளமான இரும்பு ராடு இலைகளால் மூடப்பட்டிருந்தது. அதிவேகத்தில் வந்த ரயில் ராடின் மீது ஏறி கடந்து சென்றது. ரயிலின் வேகம் காரணமாக அந்த ராடு தண்டவாளத்தில் இருந்து விலகி ஓரத்தில் சிதறியது.

இதை டிரைவர் உணர்ந்ததால் ரயில் நிறுத்தப்பட்டு ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து ரயில் தண்டவாளத்தின் அருகே இரும்பு ராடு ஒன்று கிடப்பதை கண்டறிந்தனர். அதிர்ஷ்டவசமாக அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாததால் சுமார் 30 நிமிட தாமதத்திற்கு பிறகு அந்த ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. ரயில் தண்டவாளத்தில் இரும்பு ராடை போட்டதுடன், அதன்மேல் இலைகளை போட்டு மூடியதால், இது திட்டமிட்டு ரயிலை கவிழ்க்க மர்ம நபர்கள் செய்த காரியமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது. இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி appeared first on Dinakaran.

Related Stories: