தடம் புரண்ட ரயில் பெட்டிகள் அகற்றம்: செங்கல்பட்டு – சென்னை கடற்கரை மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்கியது..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு – சென்னை கடற்கரை மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில், காவல்நிலைய ரயில்வே கேட் பகுதியில் தடம்புரண்டது. 42 பெட்டிகளுடன் சென்ற சரக்கு ரயிலில், ரயில் பெட்டிகளின் பாரம் தாங்காமல் தண்டவாளம் உடைந்து, 9 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. இதன் காரணமாக செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் காத்திருந்து ஏறிச்சென்றார்கள். ஒரே நேரத்தில் அதிக மக்கள் குவிந்துள்ளதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டதால் செங்கல்பட்டு – சென்னை கடற்கரை மின்சார ரயில் நிறுத்தப்பட்டிருந்தது. சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து செங்கல்பட்டு வரையிலான ரயில்சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இதனிடையே, செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தடம் புரண்ட 9 சரக்கு ரயில் பெட்டிகளும் முற்றிலுமாக அகற்றப்பட்டது. விபத்துக்குள்ளான 9 ரயில் பெட்டிகள் அகற்றப்பட்ட நிலையில் தண்டவாளத்தை சீர்செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது.

தண்டவாள பராமரிப்பு பணி முடிந்தவுடன் விரைவு ரயில்கள், மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என தகவல் வெளியானது. அதன்படி, தடம்புரண்ட ரயில் பெட்டிகளை மீட்டு தண்டவாளம் சீரமைக்கப்பட்டது. தற்போது, செங்கல்பட்டு – சென்னை கடற்கரை மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. நேற்றிரவு 10மணிக்கு ரயில் தடம் புரண்ட நிலையில் சுமார் 18 மணி நேரத்திற்குப் பின் போக்குவரத்து சீரானது. இதனால் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

 

The post தடம் புரண்ட ரயில் பெட்டிகள் அகற்றம்: செங்கல்பட்டு – சென்னை கடற்கரை மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Related Stories: