சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அடுத்தடுத்து வந்த விமானங்களில் ரூ.1 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்: பெண் பயணி கைது

சென்னை: சென்னை வந்த விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து நேற்று முன்தினம் காலை ஏர் இந்தியா பயணிகள் விமானம் வந்தது. அது, சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்வதையொட்டி, விமான ஊழியர்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது விமானத்தின் இருக்கை ஒன்று தூக்கியபடி இருந்தது. அதை சரி செய்தபோது, சீட்டுக்கு கீழே பார்சல் ஒன்று இருந்தது. தகவலறிந்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் வந்து, மெட்டல் டிடெக்டர் மூலம் அந்த பார்சலை ஆய்வு செய்தனர். பின்னர் அதில் தங்கப் பசை இருந்ததை கண்டுபிடித்தனர். விமான நிலைய சுங்கத்துறையினர் வந்து பார்த்தபோது பார்சலில் 1.25 கிலோ தங்க பசை இருந்தது.

அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.73 லட்சம். இதையடுத்து சுங்க அதிகாரிகள் வழக்குப்பதிந்து, துபாயிலிருந்து விமானத்தில் தங்கப் பசை கடத்தி வந்தது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், நேற்று முன்தினம் மதியம் வந்தது. அதில் சிங்கப்பூருக்கு சுற்றுலா பயணியாக சென்று வந்த சென்னையைச் சேர்ந்த 45 வயது பெண்ணை பரிசோதித்தபோது உள்ளாடைகளுக்குள் 5 பெரிய தங்க செயின்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். அதன் எடை 473 கிராம், மதிப்பு ரூ.26.27 லட்சம். அந்த பெண் பயணியை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரிக்கின்றனர். அடுத்தடுத்து நடந்த சோதனைகளில், ரூ.1 கோடி மதிப்புடைய 1.73 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அடுத்தடுத்து வந்த விமானங்களில் ரூ.1 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்: பெண் பயணி கைது appeared first on Dinakaran.

Related Stories: