2வது டெஸ்டில் வென்று தொடரை சமன் செய்தது நியூசிலாந்து: வங்கதேசம் ஏமாற்றம்

மிர்பூர்: வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்ற நியூசிலாந்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. நியூசி.க்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற வங்கதேசத்தின் சோக வரலாறு தொடர்கிறது. வங்கதேசம் சென்ற நியூசிலாந்து அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. சிலெட்டில் நடந்த முதல் டெஸ்டில் வங்கதேசம் 150 ரன் வித்தியாசத்தில் வென்று 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் மிர்பூரில் நடந்தது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் 172 ரன், நியூசி. 180 ரன்னில் சுருண்டன. மழை காரணமாக 2வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

3ம் நாள் முடிவில் வங்கதேசம் 2வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 38 ரன் எடுத்திருந்தது. ஜாகீர் ஹசன் 16, மொமினுல் ஹக் (0) இருவரும் 4வது நாளான நேற்று 2வது இன்னிங்சை தொடர்ந்தனர். பொறுப்புடன் விளையாடிய தொடக்க வீரர் ஜாகீர் 59 ரன் எடுக்க, சக வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்து ஏமாற்றமளித்தனர். வங்கதேசம் 2வது இன்னிங்சில் 144 ரன் எடுத்து ஆல் அவுட்டானது (35 ஓவர்). தைஜுல் இஸ்லாம் 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசி. தரப்பில் அஜாஸ் படேல் 6, சான்ட்னர் 3 விக்கெட், சவுத்தீ 1 விக்கெட் வீழ்த்தினர். 137 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து தடுமாற, ஆட்டம் பரபரப்பானது. லாதம் 26, கான்வே 2, வில்லியம்சன் 11, நிகோல்ஸ் 3, டேரில் மிட்செல் 19, பிளெண்டல் 2 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, நியூசி. 69 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திணறிய நிலையில், கிளென் பிலிப்ஸ் – மிட்செல் சான்ட்னர் ஜோடி நம்பிக்கையுடன் அடித்து விளையாடி வெற்றியை வசப்படுத்தியது.

நியூசிலாந்து 39.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 139 ரன் எடுத்து வென்றது. பிலிப்ஸ் 40, சான்ட்னர் 35 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தனர். 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்ற நியூசி. 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. டெஸ்ட் தொடரில் நியூசிலாந்தை வென்றதில்லை என்ற வங்கதேசத்தின் சோக வரலாறு தொடர்கிறது. இதுவரை நடந்த 10 டெஸ்ட் தொடர்களில் நியூசி. 7-0 என ஆதிக்கம் செலுத்தியுள்ளது (3 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன). இரு அணிகளும் மோதிய 19 டெஸ்டில் நியூசி. 14, வங்கதேசம் 2ல் வென்றுள்ளன (3 டெஸ்ட் டிரா). கிளென் பிலிப்ஸ் (3/31, 87 & 40*) ஆட்ட நாயகன் விருதும், தைஜுல் இஸ்லாம் (28 ரன், 15 விக்கெட்) தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

The post 2வது டெஸ்டில் வென்று தொடரை சமன் செய்தது நியூசிலாந்து: வங்கதேசம் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: