பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து டேனிஷ் அலி எம்பி திடீர் சஸ்பெண்ட்: இந்தியா கூட்டணி எம்பிக்களுடன் சேர்ந்ததால் நடவடிக்கை

புதுடெல்லி: கட்சி விரோத நடவடிக்கைக்காக டேனிஷ் அலி எம்பியை சஸ்பெண்ட் செய்வதாக பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் உத்தரப்பிரதேச மாநில பொதுச் செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா, அக்கட்சியின் எம்பி டேனிஷ் அலிக்கு நேற்று எழுதிய கடிதத்தில், ‘கட்சியின் கொள்கைகள், சித்தாந்தம் மற்றும் ஒழுக்கத்துக்கு எதிராக எந்த ஒரு அறிக்கை வெளியிடவோ அல்லது செயல்படவோ கூடாது என்று பலமுறை வாய்மொழியாக உங்களிடம் கூறப்பட்டும், தொடர்ந்து கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகிறீர்கள். எனவே கட்சியின் நலன் கருதி, நீங்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்ப்பட்டுள்ளீர்கள்’ என கூறி உள்ளார்.

மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா பதவிநீக்கம் செய்யப்பட்டதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பியுடன் சேர்ந்து டேனிஷ் அலி வெளிநடப்பு செய்தார். அப்போது மற்ற பகுஜன் சமாஜ் எம்பிக்கள் அவையில் இருந்தனர். உபி முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, பாஜ கட்சியுடனோ, எதிர்க்கட்சிகளுடனோ சேராமல் விலகி இருந்து வருகிறது. ஆனாலும், டேனிஷ் அலி ஒன்றிய பாஜ அரசின் கொள்கைகளை தீவிரமாக எதிர்த்து வருகிறார். இந்தநிலையில் அவர் பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

The post பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து டேனிஷ் அலி எம்பி திடீர் சஸ்பெண்ட்: இந்தியா கூட்டணி எம்பிக்களுடன் சேர்ந்ததால் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: