மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6,000 வெள்ள நிவாரணம்; பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம், கால்நடைகள், சேதம் அடைந்த பயிர்கள், வீடுகளுக்கும் இழப்பீட்டு தொகை மற்றும் இதர நிவாரண உதவி தொகைகள் உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார். வங்கக்கடலில் உருவான ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த ஞாயிறு, திங்கள் ஆகிய இரண்டு நாட்கள் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்தது. அந்த 2 நாட்களில் மட்டும் சென்னை, பெருங்குடியில் 74 செ.மீ. மழை பெய்தது. சென்னை நகர் பகுதி மற்றும் ஆவடியில் 50 செ.மீ. மழை கொட்டியது. மேலும், மிக்ஜாம் புயல் காரணமாக கடலில் 2 மீட்டர் உயரத்துக்கு அலை எழும்பி கடல் மட்டம் உயர்ந்தது. இதுபோன்ற சூழ்நிலையில் சென்னையில் தேங்கிய மழைநீர் கூவம், அடையாறு, பக்கிம்காம் கால்வாய் வழியாக கடலில் கலக்க முடியாத சூழல் ஏற்பட்டது. கனமழை காரணமாக சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளின் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் வெள்ளநீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. முன்னதாக, ‘மிக்ஜாம்’ புயலின் தாக்கம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இதுகுறித்து கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும், ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஆகிய துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். மீட்பு மற்றும் நிவாரண பணிகளைத் தீவிரப்படுத்துவதற்காக 20 அமைச்சர்களும், 50க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு, நிவாரண பணிகள் முடுக்கி விடப்பட்டன. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்வாரிய பணியாளர்களும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களும், ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்களும் இந்த பணியில் இரவு, பகல் பாராமல் ஈடுபட்டனர். மழையினால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில், மக்களை மீட்க சுமார் 740 படகுகள் பயன்படுத்தப்பட்டன. இதன்மூலம், 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கும் பணிக்கென தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, பெரிய அளவில் சமையல் அறைகள் நிறுவப்பட்டு, தரமான உணவு சமைக்கப்பட்டு, சென்னை மாவட்டத்தில் மட்டும் கடந்த 8ம் தேதி வரை, மூன்று வேளை உணவாக, 47 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இதுவரை 51 லட்சத்திற்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், பால் ஆகிய பொருட்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் பெறப்பட்டு, முறையாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மழைக்கு ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதற்கிடையே, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை பாதிப்பு நிவாரண பணிக்கு ரூ.5,060 கோடி ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதையடுத்து ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 7ம் தேதி சென்னை வந்து ஹெலிகாப்டரில் சென்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். பின்னர் ராஜ்நாத் சிங் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது, மழை வெள்ள பாதிப்புகள் மற்றும் தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஒன்றிய அமைச்சருக்கு புகைப்படம் மற்றும் வீடியோவில் விளக்கி காட்டப்பட்டது. பின்னர் பேட்டி அளித்த ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழகத்தில் வெள்ளம் பாதித்த இடங்களில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப ஒன்றிய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதி அளித்தார். சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நிவாரண பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்தக்கட்டமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 11 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், துரைமுருகன், கே.என்.நேரு, கே.ேக.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, முதல்வரின் முதன்மை செயலாளர் முருகானந்தம், வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் கோபால், நிதித்துறை செயலாளர் உதயசந்திரன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் ராஜாராமன், பேரிடர் மேலாண்மை இயக்குநர் ராமன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு:தமிழ்நாட்டில் டிசம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் வீசிய ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மழைநீர் தற்போது வடிந்துள்ள நிலையில், அந்த பகுதிகளில் தற்போது 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை ஈடுபடுத்தி, பேரிடர் மீட்பு குழுவினரின் உதவியுடன் போர்க்கால அடிப்படையில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மருத்துவ முகாம்களும் தேவையான இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு பல்வேறு மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம், தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வெள்ள சேதம் குறித்தும், வழங்கப்பட வேண்டிய நிவாரண தொகை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதனடிப்படையில்,மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். இத்தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும்.

புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டு தொகையை ரூ.4 லட்சத்தில் இருந்து, ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் ரூ.5 ஆயிரத்தை ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். மழையால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவை பாசன பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500ல் இருந்து ரூ.17 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும்; பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.18 ஆயிரத்தில் இருந்து, ரூ.22,500ஆக உயர்த்தி வழங்கப்படும். மழையால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவரி பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7,410ல் இருந்து, ரூ.8,500ஆக உயர்த்தி வழங்கப்படும். எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.30,000 என்றிருந்ததை, ரூ.37,500ஆக உயர்த்தி வழங்கப்படும். வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.3,000 என்றிருந்ததை ரூ.4,000ஆக உயர்த்தி வழங்கப்படும். சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கு நிவாரண உதவிகளை பொறுத்தவரையில், முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு (மீன்பிடி வலைகள் உட்பட), ரூ.32,000ல் இருந்து, ரூ.50 ஆயிரமாகவும், பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூ.10 ஆயிரத்தில் இருந்து, ரூ.15 ஆயிரமாகவும், முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத்தொகை ரூ.75 ஆயிரத்தில் இருந்து, ரூபாய் ஒரு லட்சமாகவும், முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத்தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து, ரூ.7.50 லட்சமாக உயர்த்தியும், சேதமடைந்த வலைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தியும் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6,000 வெள்ள நிவாரணம்; பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: