சின்னச் சின்ன நற்செயல்கள்…!

இஸ்லாமிய வாழ்வியல்

பெரிய பெரிய பள்ளிக் கூடங்களையும், மருத்துவமனைகளையும் கட்டி மக்களுக்குச் சேவை செய்வது நிச்சயம் நல்லறம்தான். ஐயமே இல்லை. ஆனால், அத்தகைய பெரிய காரியங்கள் மட்டும்தான் நல்லறங்கள் என்பது தவறு. தர்மம் – அறச்செயல் என்பது பண ரீதியானது மட்டுமல்ல. அதுவல்லாத வேறு முறைகளும் தர்மத்திற்கு உண்டு.

தர்மம் என்பது என்ன?

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தர்மம் என்பதற்கு அழகான விளக்கம் தந்துள்ளார்கள். அந்த நபிமொழி வருமாறு;

“இரண்டு மனிதர்களுக்கு மத்தியில் ஒருவர் நீதி வழங்குவாராயின் அதுவும் தர்மமே.
“ஒருவருக்கு வாகனத்தில் ஏறி அமர உதவுவதும் தர்மமே.
“அல்லது அவரது பொருள்களை வாகனத்தில் ஏற்றிட உதவுவதும் தர்மமே.
“நல்ல பேச்சு பேசுவதும் தர்மமே.
“தொழுகைக்காக எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் தர்மமே.
“தொல்லை கொடுக்கும் வகையில் கிடக்கும் பொருளைப் பாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் தர்மமே.” (புகாரி, முஸ்லிம்)
இறைத்தூதர்(ஸல்) மேலும் கூறினார்;
“உனது சகோதரரின் முகம் நோக்கிப் புன்னகைப்பதும் தர்மமே.
“நன்மை புரியுமாறு ஏவுவதும் தர்மமே.
“தீமையிலிருந்து தடுப்பதும் தர்மமே.
“வழிதெரியாத நிலையில் ஒருவருக்கு வழிகாண்பித்து உதவுவதும் தர்மமே.
“பாதையில் கிடக்கும் அசுத்தம், முள், எலும்பு போன்றவற்றை அகற்றுவதும் தர்மமே.
“உன்னுடைய சகோதரனின் வாளியில் தண்ணீர் நிரப்புவதும் தர்மமே.
“இத்தகைய ஒவ்வொரு பணிக்காகவும் உனக்கு நற்கூலி – புண்ணியம் உண்டு.” (திர்மிதி)
இந்த நபிமொழிகளில் பல வழிகளில், பல்வேறு விதமாக மனித குலத்திற்கு சேவைசெய்யலாம், நன்மை செய்யலாம் என்று விளக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில வழிகள் மிக எளிதானவை. சேவை புரியும் ஆர்வம் இருந்தால், அவற்றில் வெகு எளிதாக ஈடுபடலாம்.

“வசதியுள்ளவர்கள்தாம் அறச்செயல்களில் ஈடுபட வேண்டும், நம்மிடம் என்ன இருக்கிறது தர்மம் செய்வதற்கு?” என்று எண்ணி நாம் சோம்பி இருந்து
விடக் கூடாது.

பணத்தைத் தாண்டியும் எத்தனையோ சின்னச் சின்ன நற்செயல்கள் உள்ளன. அவற்றைச் செய்வதும் தர்மமே.
– சிராஜுல்ஹஸன்.

இந்த வாரச் சிந்தனை

“ஒவ்வாரு நன்மையான செயலும் தர்மமே. நன்மையான எந்த ஒரு செயலையும் கேவலமாகக் கருதாதே. அது புன்னகை சிந்தும் முகத்தோடு உன் சகோதரனைச் சந்திப்பதாக இருந்தாலும் சரியே”-

நபிமொழி (முஸ்லிம்)

The post சின்னச் சின்ன நற்செயல்கள்…! appeared first on Dinakaran.

Related Stories: