பாகிஸ்தானில் தீவிரவாதிகள் கொல்லப்படுவதற்கு நாங்கள் கருத்து கூற முடியாது: வெளியுறவு அமைச்சக அதிகாரி பேட்டி

புதுடெல்லி: ஒன்றிய அரசின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், ‘இந்தியாவில் கிரிமினல் மற்றும் தீவிரவாதம் செய்துவிட்டு வெளிநாட்டில் தப்பிச் சென்றவர்கள், இந்திய சட்ட திட்டங்களின்படி சட்ட அமைப்புகளை எதிர்கொள்ள விரும்புகிறோம். கடந்த 2015ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் பிஎஸ்எப் வாகனத்தின் மீதான தாக்குதலில் மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி ஹஞ்சலா அட்னான் சமீபத்தில் பாகிஸ்தானின் கராச்சியில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டான். பாகிஸ்தானில் நடக்கும் சம்பவங்கள் குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது. வரும் 13ம் தேதி அல்லது அதற்கு முன் நாடாளுமன்றத்தை தாக்கப்போவதாக காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னு மிரட்டல் விடுத்துள்ளான்.

அச்சுறுத்தல்களை தீவிரமாக எடுத்துக் கொண்டு விசாரித்து வருகிறோம். மிரட்டல் விடுக்கும் தீவிரவாதிகளை ஊக்குவிக்கவோ, அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவோ விரும்பவில்லை. இந்த விஷயத்தை அமெரிக்கா, கனடா அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். கத்தாரில் எட்டு இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு குறித்து, அனைத்து சட்ட மற்றும் தூதரக உதவிகளை வழங்கி வருகிறோம்’ என்றார்.

முன்னாதாக பாகிஸ்தானில் இந்தியாவால் தேடப்பட்டு வந்த தீவிரவாதிகள் முப்தி கைசர் பரூக், காலிஸ்தானி தீவிரவாதி பரம்ஜித் சிங் பஞ்ச்வாட், இஜாஸ் அகமது அஹங்கர், பஷீர் அகமது பீர் போன்றவர்கள் அடையாளம் தெரியாத தாக்குதல்காரர்களால் கொல்லப்பட்டனர். இது மட்டுமின்றி, சமீபத்தில் தேடப்பட்டு வந்த தீவிரவாதி ஷாகித் லத்தீப் என்பவனும் கொல்லப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பாகிஸ்தானில் தீவிரவாதிகள் கொல்லப்படுவதற்கு நாங்கள் கருத்து கூற முடியாது: வெளியுறவு அமைச்சக அதிகாரி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: