மோசடி செய்த பணத்தை கேட்டு மக்கள் முற்றுகை; உடலில் கண்ணாடியால் குத்தி நிதி நிறுவன அதிபர் மிரட்டல்: தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்


போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகே சீட்டு கட்டிய பணத்தை திரும்ப கேட்ட பொதுமக்களை மிரட்டுவதற்காக, கண்ணாடியை உடைத்து தன்னைத்தானே குத்தி கொண்ட நிதி நிறுவன அதிபரால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகில் உள்ள வடம்பலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால் (55). இவர் போச்சம்பள்ளி பஸ் நிலையம் அருகே, குமரன் பைனான்ஸ் என்ற பெயரில் அலுவலகம் வைத்து, அதில் ரூ1 முதல் ரூ5 லட்சம் வரையிலான மாத சீட்டுகளை நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மக்கள் பணம் கட்டி வந்துள்ளனர். கடந்த ஓராண்டு காலமாக சீட்டு பணம் கட்டி, நிறைவடைந்த நிலையில் பணத்தை திருப்பி தராமல் தனபால் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், சீட்டு கட்டியவர்கள் போச்சம்பள்ளி போலீசில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் தனபாலை அழைத்து விசாரித்த போது, பணம் கட்டியவர்களுக்கு ஒரு மாதத்தில் பணத்தை தருவதாக கூறி அவகாசம் கேட்டுள்ளார். இந்நிலையில், ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் காவல் நிலையம் வந்த பொதுமக்கள், பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு போலீசாரிடம் முறையிட்டனர். ஆனால், பணத்தை திருப்பித் தருவது குறித்து அவர் எந்த பதிலும் கூறாததால், நேற்று போச்சம்பள்ளி பஸ் நிலையத்தில் உள்ள பைனான்ஸ் அலுவலகத்தை முற்றுகையிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள், தனபாலிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். அப்போது, ஆத்திரமடைந்த தனபால், அங்கிருந்த ஷோகேஸ் கண்ணாடியை கையால் உடைத்து, அதிலிருந்து சிதறிய கண்ணாடி துண்டை எடுத்து, தன்னைதானே உடம்பில் குத்திக் கொண்டார்.

பின்னர், ரத்த வெள்ளத்தில் அலுவலகத்தை விட்டு வெளியே ஓடி வந்த அவர், மீண்டும் தன்னைத்தானே குத்திக் கொண்டதால், பணம் கேட்டு வந்த பொதுமக்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். அவரது கையிலிருந்த கண்ணாடி துண்டை, அங்கு வந்த போலீசார் பறிக்க முயன்றபோது, கண்ணாடி துண்டை கழுத்தில் வைத்துக் கொண்டு, அறுத்து கொள்வதாக கூறி மிரட்டியதால் போலீசாரால் அவரை நெருங்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதையடுத்து, போலீசாரும், பொதுமக்களும் ஓடிச்சென்று, தனபால் கையிலிருந்த கண்ணாடி துண்டை பறித்து, அவரை போச்சம்பள்ளி அரசு மருந்துவமனைக்கு டூவீலரில் அழைத்துச் சென்றனர்.

The post மோசடி செய்த பணத்தை கேட்டு மக்கள் முற்றுகை; உடலில் கண்ணாடியால் குத்தி நிதி நிறுவன அதிபர் மிரட்டல்: தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார் appeared first on Dinakaran.

Related Stories: