அரசு பஸ்சில் கடத்திய 40 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

ஆம்பூர்: வேலூரில் இருந்து சேலம் சென்ற அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.வேலூரில் இருந்து சேலம் நோக்கி இன்று காலை அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே வந்தபோது ஆம்பூர் டவுன் போலீசில் பணிபுரிந்து வரும் போலீஸ்காரர் ராஜேஷ், அந்த பஸ்சில் ஆம்பூர் நோக்கி பயணித்தார். அப்போது அந்த பஸ்சின் சீட் அடியில் ஒரு பெரிய பார்சல் இருப்பது தெரிந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீஸ்காரர் ராஜேஷ், அந்த பார்சலை வெளியே எடுத்து பிரித்து பார்க்க முயன்றார். இதற்கு அந்த பஸ்சில் வந்த வடமாநில வாலிபர் ஒருவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் மேலும் சந்தேகமடைந்த ராஜேஷ், உடனடியாக ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து ஆம்பூர் பஸ் நிலையத்திற்கு பஸ் வந்தவுடன் அங்கு தயார் நிலையில் இருந்த போலீசார், அந்த வாலிபரை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் சுமார் 40 கிலோ எடை கொண்ட கஞ்சா இருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த வாலிபரை ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.விசாரணையில் அவர், குஜராத் மாநிலத்தை சேர்ந்த அன்வர்பாஷா முல்தானி (33) என்பதும், கஞ்சா கடத்தியதும் தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். தீவிர விசாரணையில் அவர் குஜராத்தில் இருந்து ரயில் மூலம் காட்பாடிக்கு வந்து அங்கிருந்து வேலூர் பஸ் நிலையத்திற்கு சென்று சேலத்திற்கு அரசு பஸ்சில் கஞ்சா பார்சலை கடத்தியது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post அரசு பஸ்சில் கடத்திய 40 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: