மாயமான ஆசிரியை கதி என்ன? ஊர் ஊராக சுற்றி உல்லாசம் அனுபவிக்கும் ஆசிரியர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி கணித பட்டதாரி ஆசிரியை தீபா(42). மாற்றுத்திறனாளியான இவர் தனது கணவரான இன்ஜினியர் பாலமுருகன் பயன்படுத்திய காருடன் கடந்த நவம்பர் 15ம் தேதி மாயமானார். அதே பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியரான வெங்கடேசனையும் (44) அன்று முதல் காணவில்லை. கள்ளக்காதல் காரணமாக இருவரும் தலைமறைவானதாக கூறப்படுகிறது. இருவரின் குடும்பத்தாரும் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் மற்றும் வி.களத்தூர் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவையில் அனாதையாக நின்ற தீபா பயன்படுத்திய காரை மீட்டு போலீசார் பெரம்பலூர் கொண்டு வந்தனர். காரில் ரத்த கறை படிந்த சுத்தியல் இருந்ததால் ஆசிரியை தீபாவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்குமோ என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது. கோவையில் பதுங்கி இருந்தபோது ஆசிரியர் வெங்கடேசன் தனது செல்போனில் இருந்து தொடர்புகொண்ட பாலியல் புரோக்கரான கோவை மதுக்கரை காந்தி நகரை சேர்ந்த மோகன் என்பவரை, பெரம்பலூர் அழைத்து வந்த வி.களத்தூர் போலீசார் நேற்று முன்தினம் பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.

போலீசார் தனது இருப்பிடத்தை அறிந்துவிடுவார்கள் என ஆசிரியர் வெங்கடேசன் அவ்வப்போது சிம்கார்டுகளையும், தான் பதுங்கி இருக்கும் இடத்தையும் மாற்றிமாற்றி வருவதால் போலீசார் அவரை நெருங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மதுரை, தேனி, கோவை உள்ளிட்ட இடங்களில் ஏடிஎம்களில் வெங்கடேசன் பணம் எடுத்துள்ளார். அப்போது அங்குள்ள சிசிடிவி காமிரா பதிவுகளில் ஆசிரியர் வெங்கடேசன் மட்டுமே பதிவாகி உள்ளார்.

மேலும், தலைமறைவாக உள்ள ஆசிரியர் வெங்கடேசன் தொடர்பு கொண்டு பேசும் எண்களின் உரிமையாளர்களை நெருங்கி போலீசார் விசாரிக்கும்போது அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவு ஆசிரியர் அவ்வப்போது ஏடிஎம்களில் பணத்தை எடுத்து பாலியல் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதாக போலீசார் கருதுகின்றனர். இதனால் ஆசிரியை மாயமான சம்பவத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. வெங்கடேசன் சிக்கினால் மட்டுமே, ஆசிரியை தீபா பற்றிய நிலை தெரியவரும் என்பதால், அவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

The post மாயமான ஆசிரியை கதி என்ன? ஊர் ஊராக சுற்றி உல்லாசம் அனுபவிக்கும் ஆசிரியர் appeared first on Dinakaran.

Related Stories: