×

பெண் பார்க்க செல்ல இருந்த நேரத்தில் சோகம்; காட்டுப்பன்றிக்கு வைத்திருந்த மின்வேலியில் சிக்கி 2 பேர் பலி: புதுமண வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பு முடிவுக்கு வந்த வாழ்க்கை

ஆம்பூர்: விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிக்கு வைத்திருந்த மின்வேலியில் நள்ளிரவு சிக்கிய வாலிபர் உட்பட 2 பேர் பலியாகினர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட காப்புக்காட்டை ஒட்டி உள்ள ஆம்பூர் தார்வழி பகுதியை சேர்ந்த மணி மற்றும் அவரது உறவினரான ஜெயக்குமார் (52) ஆகியோர் விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து மாட்டு தீவனங்களை பயிரிட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் ஜெயக்குமார் காவலுக்காக நிலத்திற்கு புறப்பட்டு சென்றார். அப்போது வீட்டிற்கு வந்த ஆம்பூர் ஓஏஆர் சிக்னல் அருகில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வரும் மணி மகன் வெங்கடேசன் (22) என்பவரும், ஜெயக்குமாருடன் நிலத்துக்கு சென்றார். நள்ளிரவு 12 மணியளவில் தீவன பயிர்களை மேய்வதற்காக மாடு ஒன்று விவசாய நிலத்தில் புகுந்துள்ளது. அந்த மாட்டை வெங்கடேசன் விரட்டி சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த ராமமூர்த்தி என்பவரது நிலத்தில் காட்டுப்பன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க, கள்ளத்தனமாக பம்ப்செட் மின்சாரத்தில் இருந்து மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது. திர்பாராதவிதமாக அங்கு சென்ற வெங்கடேசன் மின்வேலியில் சிக்கி தூக்கி வீசப்பட்டு இறந்தார். இவரின் அலறல் சத்தம் கேட்டு உடனடியாக விரைந்து சென்ற ஜெயக்குமாரும் மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து நிலத்தின் உரிமையாளரான ராமமூர்த்தியை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான வெங்கடேசனுக்கு தற்போது திருமணம் செய்ய முடிவு செய்த பெற்றோர் நேற்று காலை பெண் பார்க்க செல்ல இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவே மின்வேலியில் சிக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

The post பெண் பார்க்க செல்ல இருந்த நேரத்தில் சோகம்; காட்டுப்பன்றிக்கு வைத்திருந்த மின்வேலியில் சிக்கி 2 பேர் பலி: புதுமண வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பு முடிவுக்கு வந்த வாழ்க்கை appeared first on Dinakaran.

Tags : Ampur ,Minwali ,Tirupathur District ,Dinakaran ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி...