மோடியின் உத்தரவாதத்தின் மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி: பாஜ தலைவர்கள் கருத்து

புதுடெல்லி: மோடி அளித்த உத்தரவாதத்தின் மீது மக்கள் வைத்த நம்பிக்கைக்கு கிடைத்த பரிசுதான் 3 மாநில தேர்தல் வெற்றி என பாஜ தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். ஒன்றிய அமைச்சரும் ராஜஸ்தான் மாநில பாஜ தேர்தல் பொறுப்பாளருமான பிரகலாத் ஜோஷி நேற்று கூறுகையில்,‘‘ வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதங்களை மோடி வழங்கினார். மூன்று மாநிலங்களிலும் பாஜவுக்கு மக்கள் ஆசி அளித்துள்ளனர். காங்கிரசின் போலி வாக்குறுதிகளை மக்கள் நிராகரித்துள்ளனர்’’ என்றார்.

சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் ராமன் சிங் கூறுகையில்,‘‘ மோடி அளித்த உத்தரவாதங்களின் மீது மக்கள் நம்பிக்கை வைத்தனர். மோடிக்காக மக்கள் வாக்களித்துள்ளனர். கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் அவருடைய பணிகளுக்காக வாக்களித்துள்ளனர்’’ என்றார். மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறுகையில்,‘‘ மத்திய பிரதேச சட்டபேரவை தேர்தலில் மோடி தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டார். மாநில மக்களின் இதயத்தில் மோடி உள்ளார்.

மோடியின் இதயத்திலும் மத்திய பிரதேசம் உள்ளது. அவர் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். பொதுக்கூட்டங்களில் அவர் விடுத்த வேண்டுகோள் மக்களின் மனதை வென்றது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வகுத்த தேர்தல் உத்திகள், கட்சி தலைவர் ஜே.பி.நட்டாவின் வழிகாட்டுதல் ஆகியவையும் வெற்றிக்கு காரணமாகும்’’ என்றார்.

The post மோடியின் உத்தரவாதத்தின் மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி: பாஜ தலைவர்கள் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: