அனைத்து துறைகளும் ஒருங்கிணைப்பு ‘புயலை எதிர்கொள்ள தயார்’: தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா பேட்டி

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள புயலை எதிர்கொள்வதற்கு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து தயார் நிலையில் இருப்பதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலையத்தில் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா, தீயணைப்பு துறை டிஜிபி ஆபாஷ் குமார் ஆகியோர் தயார் நிலையில் உள்ள வீரர்கள் மற்றும் மீட்பு உபகரணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனையடுத்து நிருபர்களிடம் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேசியதாவது:

வங்கக்கடலில் புயல் உருவாகி இருக்கக்கூடிய நிலையில் தமிழகத்தில் புயலை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் இணைந்து தயார் நிலையில் உள்ளோம். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பாதிப்புகள் புயல் பாதிப்புகள் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாவட்டங்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மழை பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள எல்லா உபகரணங்களும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறையினர் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

மேலும், முன்கூட்டியே மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொண்டதால் பெரிய அளவில் மழையினால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படக் கூடாது என்பதற்காக அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது. அதேபோல், பாதிப்பு எந்தெந்த இடங்களில் ஏற்படுகிறது என்பதனை கண்டறிந்து பாதிப்புகளை உடனடியாக சரி செய்ய 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. ஏரிகளில் இருந்து தண்ணீர் எவ்வளவு இருக்கிறது, எவ்வளவு நீர் வெளியேற்ற வேண்டும் என்பது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வங்கக்கடலில் உருவாகி உள்ள புயலின் காரணமாக காற்று மற்றும் மழை அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் வீட்டிலேயே இருக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். இதுமட்டுமின்றி, தமிழகம் முழுவதும் 364 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களில் (பிரத்யேகமாக மூன்று மீட்பு பணி நிலையங்கள்) 6473 அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் போர்க்கால அடிப்படையிலும் பணியாற்றி வருகின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு பயிற்சி பெற்ற 20 தீயணைப்போர்கள் கொண்ட நீச்சல் மற்றும் கமாண்டோ வீரர்கள் அடங்கிய குழு தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

The post அனைத்து துறைகளும் ஒருங்கிணைப்பு ‘புயலை எதிர்கொள்ள தயார்’: தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: